தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசு அமைய வேண்டும் ராகுல்காந்தி பேச்சு


தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசு அமைய வேண்டும் ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 1 March 2021 12:49 AM GMT (Updated: 1 March 2021 12:49 AM GMT)

மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம் என்றும், தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசு அமைய வேண்டும் என்றும் ராகுல்காந்தி பரபரப்பாக பேசினார்.

நெல்லை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2-வது நாளாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பிரசாரம் செய்தார்.

ஆலங்குளத்தில் நடந்த பிரசாரத்தில் ராகுல்காந்தி கூறியதாவது:-

தொழில் வளர்ச்சி பாதிப்பு

மத்திய அரசால் பொதுமக்கள் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் தொழில்கள் நலிந்துவிட்டது. மத்திய அரசு அந்த தொழில்களை முழுவதுமாக அழிக்க நினைக்கிறது. சில பெரிய தொழில் அதிபர்களுக்கு சலுகை செய்கிறது. அவர்களுக்கு இந்த அரசு தொழில் செய்ய ஊக்குவிக்கிறது. ஆனால், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆட்சியில் சிறு தொழில், விவசாயம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது.

மக்களை மதிக்கக்கூடிய அரசு

தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக லஞ்ச லாவண்யத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இனியும் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். தமிழகத்தில் மக்களை மதிக்கக்கூடிய அரசு அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காமராஜர் சிலைக்கு மரியாதை

தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

இதில் ராகுல்காந்தி பேசியதாவது:-

தரமான கல்வி

கல்வித்துறையை பொறுத்தவரையில் முழு அதிகாரமும் மத்திய அரசுக்கு தான் உள்ளது. இதை நாம் சரிசெய்ய வேண்டும். நம்மை பொறுத்தவரையில் ஏழை மாணவர்களுக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

நாட்டில் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு இந்துத்துவா கொள்கைகளை பரப்பி வருகிறது. நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல. ஆனால், அனைத்து மதத்தினரையும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு எதற்காக ஒரு மதத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

70 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் ஆதிக்கத்தை விரட்டி அடித்தோம். அதேபோன்று எவ்வித வெறுப்பும், கலவரமும் இன்றி அகிம்சை முறையில் மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம். தமிழகத்தில் யார் வெற்றி நடை போடுகிறார்கள் என்று தெரியவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ராகுல்காந்தி சுரண்டை, புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

கே.எஸ்.அழகிரி

இந்த பிரசார நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் தினேஷ்குண்டுராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லையப்பர் கோவிலில் தரிசனம்

இதற்கிடையே நெல்லையப்பர் கோவிலில் நேற்று காலை ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார். அங்கு பிரசாதம் கொடுத்த அர்ச்சகர்கள் அவருக்கு தலையில் பட்டுவேட்டி பரிவட்டம் கட்டி விட்டனர்.

ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரத்தில் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, அடைக்கலப்பட்டினத்தில் சாலையோர கடைக்கு சென்று டீ வாங்கி குடித்தார்.

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் விலக்கு பகுதியில் தொழிலாளியிடம் இளநீர் வாங்கி குடித்தார்.

Next Story