சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 190 இடங்களில் போட்டியிட முடிவு


சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 190 இடங்களில் போட்டியிட முடிவு
x
தினத்தந்தி 1 March 2021 1:13 AM GMT (Updated: 1 March 2021 1:13 AM GMT)

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 190 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 44 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. 119 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகளும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு 7 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு தலா 1 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

ஆனால், தேர்தல் முடிவு தி.மு.க. கூட்டணிக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. வெறும் 31 இடங்களில் மட்டுமே இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. 23 இடங்களில் மட்டும் வெற்றிபெற்ற தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி இல்லை

இதனால், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, சற்று சுதாரித்துக்கொண்ட தி.மு.க. 174 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 5, மனிதநேய மக்கள் கட்சிக்கு 4, புதிய தமிழகம் கட்சிக்கு 4, மக்கள் தே.மு.தி.க.வுக்கு (அதாவது தே.மு.தி.க. அதிருப்தி) 3, பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 1, சமூக சமத்துவப் படைக்கு 1, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு 1 என 60 தொகுதிகளை ஒதுக்கியது.

இந்தத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், மீண்டும் எதிர்க்கட்சி அளவுக்கு உயர்த்தியது. அதாவது, தி.மு.க. கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. ஆனாலும், இந்தக் கூட்டணியில், 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது விமர்சனத்திற்கு உள்ளானது. தி.மு.க. ஆட்சி அரியணை ஏறுவதை தடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தமுறை எத்தனை தொகுதிகள்?

எனவே, இந்தமுறை கூட்டணி கட்சிகளுக்கு ‘சீட்’ ஒதுக்குவதில் தி.மு.க. அவசரம் காட்டவில்லை. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 190 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 44 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, காங்கிரசுக்கு 23, ம.தி.மு.க.வுக்கு 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவைகளுக்கு தலா 1 என வழங்கும் என தெரிகிறது.

Next Story