மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கவே 3-வது அணி ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கவே 3-வது அணி ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 March 2021 2:10 AM GMT (Updated: 1 March 2021 2:10 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கவே 3-வது அணி அமைக்க திட்டமிடுகிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் உள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் கல்லல் தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டு, அடிமை சாசனத்தில் சிக்கிக்கொண்டார். தன்னையும் ஒரு விவசாயி எனக்கூறும் அவர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இதுவரை குரல் கொடுக்கவில்லை.

கொந்தளிப்பு

தமிழகத்தை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா கட்சியால் கால் ஊன்ற முடியாது. அதை தெரிந்து தான் தற்போது அ.தி.மு.க.வுடன் கை கோர்த்து கொண்டு தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவுடன் பா.ஜனதா வந்துள்ளது. அதை முறியடிப்பதே எங்களது முதன்மையான குறிக்கோள்.

கோவா, புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட்டு பா.ஜனதா தங்கள் நாடகத்தை அரங்கேற்றி விட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதை தமிழகத்தில் செய்ய முடியாது. அவ்வாறு செய்ய அவர்கள் முயற்சி செய்தால் தமிழக மக்கள் மிகப்பெரிய கொந்தளிப்பை காட்டுவார்கள்.

3-வது அணி

தற்போது அ.தி.மு.க. அரசு வன்னியர் சமுதாயத்துக்கு உள் இட ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது தேர்தலுக்காகவே ஆகும். நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்காது என்று எச்.ராஜா பேசி வருவது அரசியல் சாசனத்திற்கு விரோதமான பேச்சு.

இதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கவே 3-வது அணி அமைக்க திட்டமிடுகிறார்கள். இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story