‘ஆட்சி முடியும்போது அரைவேக்காடு அறிவிப்புகள் மூலம் சமூகநீதியை காக்க முடியாது’ மு.க.ஸ்டாலின் பேச்சு


‘ஆட்சி முடியும்போது அரைவேக்காடு அறிவிப்புகள் மூலம் சமூகநீதியை காக்க முடியாது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 1 March 2021 3:08 AM GMT (Updated: 1 March 2021 3:08 AM GMT)

வேஷம் போடுபவர்களை மக்கள் நம்பக்கூடாது என்றும், ஆட்சி முடியும்போது அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியை காக்க முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆர். சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-

குப்பை நகரமாக மாற்றியிருக்கிறார்கள்

சென்னை மாநகரின் மேயராக நானும் என்னை அடுத்து வந்த மா.சுப்பிரமணியமும் செய்த பணிகளால் தான் சென்னை வளர்ந்தது. அதேபோல் துணை முதல்-அமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் நான் இருந்தபோது சென்னைக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அதிகம். ஆனால் இன்று சென்னையை குப்பை நகராக மாற்றிவிட்டார்கள். சிங்கார சென்னையை சீரழிந்த சென்னையாக ஆக்கிவிட்டார்கள்.

எப்போது டெங்கு வருமோ, வைரஸ் பரவுமோ என்ற அச்சம் எல்லா வார்டுகளிலும் இருக்கிறது. சில மண்டலங்களுக்கு மட்டும் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விட்டுள்ளார்கள். அந்தப்பணிக்காக குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே டெண்டர் விட்டதை போல காட்டி விதிமுறைகளை திருத்தி இருக்கிறார்கள். குப்பைக்கு வரி போட்ட குப்பை அரசுதான் இது. நான் கண்டித்தபிறகு தான் அதை ரத்து செய்தார்கள்.

பகல் கொள்ளை

கொரோனா காலத்தில் ஒரு தகரத்துக்கு வாடகை 8,500 ரூபாய் என்று போட்டுள்ளார்கள். ஆட்டோவில் மைக் வைத்து சொல்வதில் ஊழல். சிறு வியாபாரிகளுக்கு மாதம் தோறும் பணம் கொடுத்ததாக சொல்லி கணக்கு காட்டி இருக்கிறார்கள். இப்படி கொரோனா காலத்து அறுவடைகளே சென்னை மாநகராட்சியில் அதிகமாக நடந்தன. இந்த மோசடிகளுக்கு பகல் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

‘‘ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு, இந்த ஸ்டாலின் எந்த அவதாரத்தையும் எடுக்க தேவையில்லை. ஸ்டாலின், ஸ்டாலினாகவே இருந்தாலே அ.தி.மு.க. வீழ்ந்துவிடும். அ.தி.மு.க.வை கரையானைப் போல எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அரித்து பலவீனம் ஆக்கிவிட்டார்கள். எனவே இதனை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் தேவையில்லை.

வேஷம் போடுகிறார்கள்

சசிகலா சிறையை விட்டு வெளியில் வந்துவிட்டார் என்றதும் பயந்து போய் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை பூட்டியவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் நினைவிடத்தை பூட்டினர். ஜெயலலிதா பிறந்த அன்று கூட அதனை அவரால் திறக்க முடியவில்லை. அந்தளவுக்கு பயம் பீடித்துக்கிடக்கும் எடப்பாடி பழனிசாமி விரைவில் வீழ்வார். மக்கள் அதைச் செய்வார்கள்.

விவசாயி என்று போட்ட வேஷம் தேர்தலுக்காக! சமூகநீதி என்று போடும் வேஷமும் தேர்தலுக்காக என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். ஆட்சி முடியும்போது அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது. தி.மு.க. அரசு அமைந்ததும், அனைவருக்குமான சமூகநீதியை நிச்சயம் வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story