“தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்தி கொண்டால் பா.ஜ.க.வுக்கு நல்லது”: நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி


“தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்தி கொண்டால் பா.ஜ.க.வுக்கு நல்லது”: நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 1 March 2021 2:27 PM GMT (Updated: 1 March 2021 2:27 PM GMT)

“தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்தி கொண்டால் பா.ஜ.க.வுக்கு நல்லது” என கோபியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

3-வது முறையாக...
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் வந்தார். இதையொட்டி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெரும். இதனால் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் அனைவரும் தேர்ச்சி, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, 6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி உள்பட பல திட்டங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது. இதுவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.

பொய் பிரசாரம்
இந்த சட்டசபை தேர்தலில் பிரசாரத்துக்கு பா.ஜ.க. என்னை பயன்படுத்தி கொண்டால் அவர்களுக்குத்தான் நல்லது. என்னை அழைப்பார்கள் என நான் நம்பிக்கையோடு உள்ளேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்வதால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

தி.மு.க.வினர் தவறான கருத்துகளை முன்வைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது இந்த தேர்தலில் எடுபடாது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனியாக நின்று தேர்தலை சந்தித்தால் கூட ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்கும்.

சசிகலா வருகையால் இந்த தேர்தலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட போவது இல்லை. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது கனவில் கூட நடக்காது. அவருக்கு இனி எந்த விதமான வாய்ப்பும் கிடையாது. மேலும், அவர் பொதுமக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story