சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது


சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 2 March 2021 5:07 AM GMT (Updated: 2 March 2021 5:07 AM GMT)

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்பட கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. அதேபோல தே.மு.தி.க.வுடனும், அமைச்சர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

தே.மு.தி.க.வுடன் தொடரும் இழுபறி

இதில் அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது, பா.ம.க.வு.க்கு அளிக்கப்பட்ட இடங்களை காட்டிலும் அதிகமான இடங்களை தருமாறு தே.மு.தி.க. தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து நேற்று காலை மறுபேச்சுவார்த்தைக்கு தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதனை தே.மு.தி.க. மறுத்து, பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. இதையடுத்து அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்வதில் தொடரும் இழுபறி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க.வை கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதர கட்சிகளுக்கு...

வேட்புமனு தாக்கல் தேதி நெருங்கும் நிலையில் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது? அதற்கான பேச்சுவார்த்தையை எப்போது முன்னெடுப்பது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனையின்போது விரிவாக பேசப்பட்டது. அப்போது அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு பணி குறித்து பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வழங்கினார்கள். இதுதவிர தேர்தல் களப்பணிகள், பிரசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் சார்ந்த பணிகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.

Next Story