மு.க.ஸ்டாலின் 68-வது பிறந்தநாளை கொண்டாடினார் ராகுல்காந்தி, ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து


மு.க.ஸ்டாலின் 68-வது பிறந்தநாளை கொண்டாடினார் ராகுல்காந்தி, ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து
x
தினத்தந்தி 2 March 2021 5:11 AM GMT (Updated: 2 March 2021 5:11 AM GMT)

மு.க.ஸ்டாலின் தனது 68-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து வாழ்த்து பெற்றார். அவருக்கு ராகுல்காந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 68-வது பிறந்தநாள் ஆகும். அவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் ‘கேக்' வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். மு.க.ஸ்டாலினுக்கு அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீஷன் மற்றும் பேரக்குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்து கூறினர். தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் மத்திய மந்திரிகள் எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதி சமாதி மீது ‘லட்சிய தலைவரின் எழுச்சிநாள். மாற்றம் தரும் 2021' என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று, பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் தெரிவித்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு சென்று, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதன்பின்னர் சி.ஐ.டி.நகர் இல்லத்துக்கு சென்று ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் வாழ்த்து கூறினார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுசெயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

தி.மு.க.வினர் வாழ்த்து

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்துக்கு மு.க.ஸ்டாலின் காலை 9.15 மணியளவில் வருகை தந்தார். அப்போது அவருக்கு நாதஸ்வர கச்சேரி, மேளதாளம் முழங்க, வாழ்த்து கோஷத்துடன் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து கலைஞர் அரங்கத்தில் தி.மு.க.வினர் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் ‘கேக்’ வெட்டினார். அதன்பின்னர் அவர், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அவருக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், மாவட்டச்செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலினுக்கு ஆட்டுக்குட்டி, வாஸ்து மீன் போன்ற விதவிதமான பிறந்தநாள் பரிசுகள் வழங்கப்பட்டன. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆளுயர வெள்ளி செங்கோலை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மாணவிகளுக்கு மதிய உணவு

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், சென்ன-மயிலை மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா, இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்பட பிரமுகர்களும் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் காலை 9.15 மணி முதல் மதியம் 12 மணி வரை மு.க.ஸ்டாலின் நின்றவாறு வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிக்கு சென்றார். அங்குள்ள மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலினும், துர்காவும் மதிய உணவை தங்கள் கையால் பரிமாறினர்.

ராகுல்காந்தி, ரஜினிகாந்த்

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தொலைபேசி மூலமாகவும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் அறிக்கை வாயிலாகவும் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நேற்று ‘டுவிட்டர் ஹேஷ்டேக்’கில் ‘டிரெண்டிங்' ஆனது.

மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

மேலும் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சிரோமணி அகாலிதள் கட்சி தலைவர் நரேஷ் குஜரால், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் எம்.பி., குன்றக்குடி அடிகளார் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, முன்னாள் மத்திய மந்திரி சச்சின் பைலட், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Next Story