ஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” - சென்னை ஐகோர்ட்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 March 2021 9:05 AM GMT (Updated: 2 March 2021 9:33 AM GMT)

ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெற உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. 

இதனிடையே ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் பெறவில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரிய பகவான் தாஸ் என்பவர் சென்னை ஐகோர்டடில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்பதால், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், அது நீதிமன்றத்தின் பணி அல்ல என்றும்,  இதுதொடர்பாக மனுதாரர் அரசை அணுகலாம் என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story