மாநில செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 702 பறக்கும் படைகள் அமைப்பு தலைமை தேர்தல் அதிகாரி தகவல் + "||" + 702 Flying Forces Organization Chief Electoral Officer informed to stop paying for the vote

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 702 பறக்கும் படைகள் அமைப்பு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 702 பறக்கும் படைகள் அமைப்பு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை வீதம் மொத்தம் 702 பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. முக்கிய கட்சிகளின் தேர்தல் கூட்டணி முடிவான நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ம.க.வுடன் தொகுதி உடன்பாடு முடிவடைந்த நிலையில் பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தி.மு.க.வும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

702 பறக்கும் படை

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்வையிடும் குழு, கணக்கீட்டு குழு ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு ஆகியவை ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற வீதத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை என மொத்தம் 702 பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது.

மற்ற குழுக்கள், ஒரு தொகுதிக்கு ஒன்று என்றளவில் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் நேரத்தில் கட்சிகள், வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவுகளை வீடியோ கண்காணிப்பு குழு படம் பிடித்து, வீடியோ பார்வையிடும் குழுவிடம் அளிக்கும். அதில் செலவு, தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடிவு செய்து, கணக்கீட்டு குழுவிடம் அளிக்கும். கணக்கீட்டு குழு, தேர்தல் செலவுகள் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ளும்.

330 கம்பெனி துணை ராணுவம்

தமிழகத்திற்கு இதுவரை 45 கம்பெனி துணை ராணுவம் (ஒரு கம்பெனிக்கு 150 முதல் 160 வீரர்கள்) வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் 15 கம்பெனி துணை ராணுவம் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் தமிழகத்திற்கு வரவுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2019-ம் ஆண்டு) 160 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது (2016-ம் ஆண்டு) 300 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்திருந்தனர். இந்த தேர்தலுக்கு 330 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள்.

தேர்தல் வழக்குகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தனியார் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், பேனர்களை அகற்றி இருக்கிறோம். அந்த வகையில் பொது இடங்களில் இருந்து 61 ஆயிரத்து 710 போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டன. அது தொடர்பாக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் இடங்களில் இருந்து 21 ஆயிரத்து 133 போஸ்டர், பேனர்கள் அகற்றப்பட்டு, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தேர்தல் நேரத்தில் மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டும் என்ற அவசியம் எழவில்லை. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பான கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கூட்டி உள்ளது. தேர்தல் காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனையை இன்று மேற்கொள்ள இருக்கிறேன். மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடக்கும் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள்.

முன்தேதியிட்டு அரசாணை

குமரி மாவட்டத்தில் சில பதவிகளுக்கான அரசாணையை முன்தேதியிட்டு அளித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பிப்ரவரி 25-ந் தேதி அரசாணைகள் வழங்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

அரசாணைகளை பிறப்பிப்பதற்காக முதலில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் ஆகியோர் முடிவு செய்து அதை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொண்டு வருவார்கள். அதை தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு அனுப்பி வைப்பார். தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பிறகு அந்த அரசாணை வெளியிடப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்கு மாநில அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும். அப்போது அவர், என்னென்ன முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

தமிழகத்தில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அவற்றின் எண்ணிக்கையை 88 ஆயிரத்து 932 ஆக உயர்த்த இருக்கிறோம். கூடுதல் வாக்குச்சாவடிகளுக்கான ஒப்புதல் இன்னும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை. வாக்குப்பதிவு அன்று 50 சதவீத வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ மூலம் வாக்குப்பதிவு ஒளிபரப்பப்படும். பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோவாக பதிவு செய்யப்படும்.

80 வயதுக்கு மேற்பட்டோர் 13 லட்சம் பேர்

வீட்டில் இருந்தபடி தபால் வாக்களிப்பதற்கு 3 வகையினருக்கு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய 3 வகையினரின் பட்டியலை வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் தயார் செய்வார்கள். தேர்தல் அறிவிப்பாணை வெளியான நாளில் இருந்து (வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள்) 5 நாட்களுக்குள் அவர்களின் வீடுகளுக்கு அந்த அலுவலர்கள் சென்று, தபால் மூலம் வாக்களிக்க விருப்பமா? என்று கேட்பார்கள்.

அவர்கள் விருப்பம் தெரிவித்தால் 12-டி என்ற விண்ணப்பத்தை அளிப்பார்கள். அதை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன்படி வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பெட்டியை எடுத்துக்கொண்டு தேர்தல் அலுவலர்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போது தரப்படும் வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு செய்து பெட்டிக்குள் போட வேண்டும்.

அவர்களின் விரல்களில் மை வைக்கப்படாது. ஆனாலும் அவர்கள் யாராவது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு செய்ய முடியாது. ஏனென்றால், 12-டி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு அளித்ததும், அவர்களின் பெயர் இடம்பெற்றிருக்கும் பட்டியலில் உள்ள பெயர் ‘டிக்’ செய்யப்பட்டுவிடும். தமிழகத்தில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் 80 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பூதலூர் வட்டாரத்தில் 2,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது மருத்துவ அலுவலர் தகவல்
பூதலூர் வட்டாரத்தில் 2,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
2. கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (சனிக்கிழமை) முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
3. முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்
முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்.
4. முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்
முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்.
5. சட்டமன்ற தேர்தல் 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்
சட்டமன்ற தேர்தலையொட்டி 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.