‘சசிகலாவின் முடிவு சோர்வை ஏற்படுத்துகிறது’ டி.டி.வி.தினகரன் பேட்டி


‘சசிகலாவின் முடிவு சோர்வை ஏற்படுத்துகிறது’ டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2021 2:05 AM GMT (Updated: 4 March 2021 2:05 AM GMT)

சசிகலாவின் முடிவு சோர்வை ஏற்படுத்துவதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.

சென்னை, 

அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா திடீரென அறிவித்துள்ள நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒற்றுமையை வலியுறுத்தினார்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவரது ஆட்சியை சசிகலா அமைத்து கொடுத்தார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஒரு பொதுச்செயலாளரை தேர்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் 2016 டிசம்பர் 29-ந் தேதி பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். அதன்பிறகு எல்லோரும் சேர்ந்து சசிகலா தான் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக அதையும் ஏற்றுக்கொண்டார்.

அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை தொடர்ந்து சசிகலா பெங்களூரு சிறைக்கு செல்லும் நேரத்தில், இப்போது இருக்கும் முதல்-அமைச்சரை, எம்.எல்.ஏ.க்களை கூட்டி ஆட்சி தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு 4 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு வந்த கடிதங்களை பற்றி சொல்வார்கள். சிறையில் இருந்து வரும்போது கூட அதே எண்ணத்தில் தான் சசிகலா இருந்தார். தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னாலாவது எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுவார்கள் என்று நினைத்தார். இப்போது, 3 மாதங்கள் ஆகப்போகிறது. நான் ஒதுங்கி இருந்தால் தான் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதை தெரிந்து இந்த முடிவை எடுத்து அறிவித்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.டி.வி.தினகரன் அளித்த பதில்களும் வருமாறு:-

காரணம் என்ன?

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமைகோரும் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அரசியலை விட்டு ஒதுங்குவது என்பது சசிகலாவுக்கு பின்னடைவாக இருக்காதா?

பதில்:- அரசியலை விட்டு ஒதுங்கி போகிறேன் என்று சொல்லும்போது எதற்கும் உரிமை கோரப்போவது இல்லை.

கேள்வி:- சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு என்ன காரணம்?

பதில்:- வெளிப்படையான காரணம் நான் கூறியது தான். அவர்கள் யாரும் ஒற்றுமையாக இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்னை (சசிகலா) சேர்த்துக்கொள்வதில் நான் ஒரு மையப்பொருளாக இருக்க வேண்டாம் என்று கருதி விலகி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிராத்தனை செய்து கொண்டே இருப்பேன் என்று தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க. நிர்ப்பந்தமா?

கேள்வி:- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் நீங்கள் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அ.ம.மு.க.வை சேர்ந்த குறிப்பாக அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள். அவர்கள் நியாயம் கேட்டவர்களை பதவி நீக்கம் செய்ததால் உருவானது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். எங்கள் தலைமையில் கூட்டணி அமையும் என்று கூறும்போது, நாங்கள் சேர்க்கப்படுவோமா? என்று எங்களிடம் கேட்க முடியாது.

கேள்வி:- அரசியலில் சசிகலா ஈடுபடக்கூடாது என்று பா.ஜ.க. நிர்ப்பந்திப்பதாக கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் திடீரென சசிகலா அரசியலில் இருந்து விலக காரணம் பா.ஜ.க. தானா?

பதில்:- நேற்று வரை பா.ஜ.க. உங்கள் சார்பாக அ.தி.மு.க.வை நிர்ப்பந்திக்கிறதா? என்று கேட்டீர்கள். இப்போது அதே கேள்வியை மாற்றி எங்களிடம் கேட்பது எப்படி நியாயம்?

தயக்கம் ஏன்?

கேள்வி:- அ.ம.மு.க.வில் இணைவதில் சசிகலாவுக்கு என்ன தயக்கம்?

பதில்:- அவங்களுக்கு என்ன தயக்கம் என்று எனக்கு எப்படி தெரியும்.

கேள்வி:- அ.ம.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை இருக்கும்போது, சசிகலா நேரடியாக அ.ம.மு.க.வின் தலைவர் பொறுப்பை ஏற்று இருக்கலாமே?

பதில்:- எங்கள் சித்தி என்பதற்காக என் கருத்தை அவர்கள் மீது திணிக்க முடியாது. அவர் மறுபடி உங்களை (பத்திரிகையாளர்களை) சந்திக்கும் போது இந்த கேள்விக்கு பதில் சொல்வார்.

கேள்வி:- இணைப்பு என்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தபிறகு தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?.

பதில்:- அது எனக்கு தெரியவில்லை. அவர் மனதில் உள்ள கருத்தை அறிக்கையில் எழுதி இருக்கிறார்கள். அதை நான் எப்படி மாற்ற முடியும். அவரது சொந்த கருத்தில் நான் தலையிடமாட்டேன்.

சோர்வு

கேள்வி:- அரசியலை விட்டு சசிகலா ஒதுங்கி இருக்கும் முடிவு அ.ம.மு.க. தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தாதா?

பதில்:- நிச்சயமாக அது எனக்கே சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அறிக்கை கொடுத்ததும் நானே பேசிப் பார்த்தேன்.

கேள்வி:- இந்த முடிவை அவர் மறுபிரிசீலனை செய்ய வலியுறுத்தினீர்களா?

பதில்:- நிச்சயமாக வலியுறுத்தினேன். அரை மணி நேரம் பொறுத்து இருந்து பார்த்தேன். சொல்லிப்பார்த்தேன். இல்லை இது தான் சரியான முடிவு என்று தெரிவித்து விட்டார்கள். இதற்கு மேல் அவர்களை நான் கட்டாயப்படுத்தி அறிக்கையை கொடுக்காதீர்கள் என்று தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story