56 நாட்களுக்கு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 489 பேருக்கு தொற்று


56 நாட்களுக்கு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 489 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 4 March 2021 2:22 AM GMT (Updated: 4 March 2021 2:22 AM GMT)

தமிழகத்தில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 294 ஆண்கள், 195 பெண்கள் என மொத்தம் 489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 184 பேரும், கோவையில் 44 பேரும், செங்கல்பட்டில் 45 பேரும், திருவள்ளூரில் 20 பேரும், குறைந்தபட்சமாக தருமபுரி, பெரம்பலூர், ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 56 நாட்களுக்கு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 52 ஆயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 368 ஆண்களும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 564 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 31 ஆயிரத்து 298 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 643 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டில் தலா ஒருவர் என 2 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,504 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 473 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

தடுப்பூசி

தமிழகத்தில் 42-வது நாளாக நேற்று 1,235 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 66 ஆயிரத்து 337 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில், 59 ஆயிரத்து 694 பேர் முதல் முறையாகவும், 6 ஆயிரத்து 643 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 14 ஆயிரத்து 577 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 25 ஆயிரத்து 928 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 9 ஆயிரத்து 701 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 16 ஆயிரத்து 131 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 89 ஆயிரத்து 370 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story