தொடர்ந்து இறங்குமுகம்: 11 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது


தொடர்ந்து இறங்குமுகம்: 11 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
x
தினத்தந்தி 5 March 2021 12:11 AM GMT (Updated: 5 March 2021 12:11 AM GMT)

தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. அந்தவகையில் 11 மாதங்களுக்கு பிறகு, நேற்று ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை ஆனது.

சென்னை, 

தங்கம் விலை கடந்த ஓராண்டு காலமாக விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் தங்கத்தின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு, அதன் விலை மளமளவென சரியத் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்து கொண்டே வரும் நிலையில், அவ்வப்போது சற்று விலை அதிகரித்த வண்ணமும் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கம் விலை பெருமளவில் சரிந்து வருகிறது. நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது.

ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 264-க் கும், ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்து 112-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.47-ம், பவுனுக்கு ரூ.376-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 217-க்கும், ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 736-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,568 வரை குறைந்து, கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை போல வெள்ளி விலையும் நேற்று சரிந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 72 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனையான வெள்ளி, நேற்று கிராமுக்கு 2 ரூபாய் 40 காசும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 400-ம் குறைந்து, ஒரு கிராம் 70 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.70 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

முதலீடு குறைவு

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, ‘‘தங்கத்தின் மீது முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் குறைத்து, பங்கு சந்தையில் அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். இதன் காரணமாகவும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகின்ற காரணத்தாலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது’’ என்றார்.

Next Story