குமரியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள 79 துணை ராணுவப் படையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது


குமரியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள 79 துணை ராணுவப் படையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
x
தினத்தந்தி 5 March 2021 9:33 PM GMT (Updated: 5 March 2021 9:33 PM GMT)

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக குமரி மாவட்டத்திற்கு வந்துள்ள 79 துணை ராணுவப்படையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 79 துணை ராணுவப் படையினர் நாகர்கோவில் வந்துள்ளனர். அவர்கள் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்களுக்கு நாகர்கோவில் வடிவீஸ்வரம் மற்றும் வடசேரியில் உள்ள நகர்நல மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. அப்போது 79 துணை ராணுவப் படையினரும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இதற்காக 9 வட்டாரங்களிலும் அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனாவுக்கு நேற்று வரை 16 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16 ஆயிரத்து 216 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 327 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் வரை குமரி மாவட்டத்தில் 12,769 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story