சென்னை மேற்கு மாம்பலத்தில் பிரபல ரவுடி சிவகுமார் படுகொலை; பழிக்குப்பழி வாங்க 7 பேர் கும்பல் வெறியாட்டம்


சென்னை மேற்கு மாம்பலத்தில் பிரபல ரவுடி சிவகுமார் படுகொலை; பழிக்குப்பழி வாங்க 7 பேர் கும்பல் வெறியாட்டம்
x
தினத்தந்தி 6 March 2021 2:15 AM GMT (Updated: 6 March 2021 2:15 AM GMT)

சென்னை மேற்கு மாம்பலத்தில் பிரபல ரவுடி சிவகுமார் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழி வாங்க 7 பேர் கும்பல் வெட்டி சாய்த்து, வெறியாட்டம் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பிரபல ரவுடி சிவகுமார்

சென்னை மயிலாப்பூர் மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). இவரது தொழில் ஆள்கடத்தல், கூலிப்படையை ஏவி கொலை செய்தல், வெட்டு, குத்துதான். இவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏ-பிளஸ் ரவுடி பிரிவில் இடம் பெற்றுள்ள இவர் சமீபகாலமாக தென்சென்னை தாதாவாகவே வலம் வந்தார்.

இவரது நண்பர் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டர் முறையில் சுட்டு வீழ்த்தி விட்டனர். அதற்கு பிறகு இவர் போலீசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் நண்பனாக மாறிவிட்டார்.

இவரது பரம எதிரி சென்னை பார்டர் தோட்டம் சேகர். அவரை போட்டுத்தள்ளிய பிறகு இவருக்கு எதிரி இவர்தான் என்ற நிலையில் சிவகுமார் இருந்தார். சேகரின் மனைவி மற்றும் மகன் அழகுராஜா ஆகியோர் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு வரும்போது, அண்ணாசாலை அருகே நாட்டு வெடிகுண்டை வீசி கொல்ல முயற்சி நடந்தது. அதற்கு சிவகுமார்தான் பின்னணி என்று சொல்லப்பட்டது.

தன்னை கொலை செய்ய சிவகுமார் தருணம் பார்த்து காத்திருப்பதை உணர்ந்த அழகுராஜா, சிவகுமாரை போட்டுத்தள்ளுவதற்கான நாளை எதிர்நோக்கி காத்திருந்தார். இப்படி இவர்களுக்குள் யார், யாரை போட்டு தள்ளுவது என்ற போட்டி இருந்து கொண்டே இருந்தது. தனக்கு நிகரான எதிரியே இல்லை என்று மார்தட்டி நின்ற சிவகுமாருக்கு, அழகுராஜா எதிரியாக உருவெடுத்து நின்றார்.

திருமணம்

இந்த நிலையில் சிவகுமார், சூர்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரது திருமணத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கலந்து கொண்டு, 6 பவுன் தங்கசங்கிலியை திருமண பரிசாக கொடுத்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. சிவகுமாருக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் மயிலாப்பூரில் பெண் ஒருவரை தீ வைத்து கொல்லமுயன்ற வழக்கில், சிவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அவரது சகோதரி வீட்டில் தங்கி இருந்தபோது, சிவகுமாரை துப்பாக்கி முனையில் போலீசார் பிடித்தனர். சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அவரை தீர்த்துக்கட்ட குறிவைத்து, அழகுராஜா குழுவினர் தக்க நேரம் பார்த்து காத்திருந்தனர்.

ரூ.10 லட்சம் கடன்

சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி, 2-வது தெருவில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு, சிவகுமார் ரூ.10 லட்சம் கடன் கொடுத்திருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் சிவகுமார், ரூ.10 லட்சம் கடனை வசூலிக்க, மேற்கு மாம்பலத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபரின் அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து அழகுராஜா தலைமையில் 7 பேர் கொண்ட கும்பல் சென்றதாக தெரிகிறது. இதை சிவகுமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வெட்டிக்கொலை

ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்குள் நுழையும்போது, சிவகுமாரை அவரது தலை, கழுத்து ஆகிய இடங்களில் 7 பேர் கொண்ட கும்பலும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார்கள். சரமாரியாக வெட்டு விழுந்ததால், சிவகுமாரின் முகம் சிதைந்து அவர் ரத்தவெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார். சிவகுமாரை தீர்த்துக்கட்டிய கொலை வெறிக்கும்பல் அங்கேயே வெற்றி கும்மாளம் போட்டார்களாம். அவர்களை பிடிக்க முயற்சித்த சிவகுமாரின் நண்பர் அறிவழகன் உள்ளிட்ட இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டனர். அவர்களும் காயம் அடைந்தனர்.

சிவகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தென் சென்னை கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் லட்சுமி, தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அழகுராஜா கும்பலுக்கு வலை

சிவகுமாரின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிவகுமாரை தீர்த்துக்கட்டி வெறியாட்டம் போட்டது, அழகுராஜாவின் தலைமையிலான கும்பல்தான் என்பது, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனது தந்தை பார்டர் தோட்டம் சேகர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கவும், தன்னை காப்பாற்றி கொள்ளவும் அழகுராஜா திட்டம், தீட்டி இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story