சென்னை சேப்பாக்கத்தில் சாலையில் ‘மொபட்’ ஓட்டிச்சென்று குஷ்பு பிரசாரம்


சென்னை சேப்பாக்கத்தில் சாலையில் ‘மொபட்’ ஓட்டிச்சென்று குஷ்பு பிரசாரம்
x
தினத்தந்தி 6 March 2021 11:07 PM GMT (Updated: 6 March 2021 11:07 PM GMT)

சென்னை சேப்பாக்கத்தில் சாலையில் ‘மொபட்’ ஓட்டிச்சென்று நடிகை குஷ்பு பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்தார். தமிழகத்தில் 20 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றிபெறும் என்றார்.

மொபட் ஓட்டிச்சென்ற குஷ்பு

தமிழக பா.ஜ.க. சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் ‘வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்’ என்ற தலைப்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. பேரணியை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளர் நடிகை குஷ்பு தொடங்கி வைத்தார். மீனவரணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.

பேரணியின்போது, குஷ்பு தொண்டர்களுடன் சாலையில் மொபட் ஓட்டி சென்றார். செல்லும் வழியெங்கும் மேளதாளங்கள் முழங்க, பூக்கள் தூவி குஷ்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த பயணத்தின்போது சில இடங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார். அவ்வப்போது மேளதாளத்தை வாசித்தும், அழகாக நடனமாடியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் தொண்டர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

20 தொகுதிகளிலும் வெற்றி

பேரணி நிறைவில் பிரசார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் குஷ்பு பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கியுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சாதி-குடும்ப அரசியல் செய்யும் கட்சியாக தி.மு.க. இருக்கிறது. அங்கு அனைத்து பதவிகளுக்கு சாதி அடிப்படையிலேயே தேர்வு நடக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். 2015-ம் ஆண்டில் இதே அ.தி.மு.க.வை நான் விமர்சித்தேன். அப்போது நான் வேறொரு கட்சியில் இருந்தேன். அதனால் பொய் சொல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போது பொய் பேச வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. பா.ஜ.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பா.ஜ.க. அறிவுசார் பிரிவின் மாநில துணைத்தலைவர் ஜே.பி.குணா தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் உள்பட ஏராளமானோர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த பேரணியில் அகில இந்திய இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 


Next Story