3 நாட்களாக தொடர்ந்து அதிகரிப்பு தமிழகத்தில் 567 பேர் கொரோனாவால் பாதிப்பு


3 நாட்களாக தொடர்ந்து அதிகரிப்பு தமிழகத்தில் 567 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 7 March 2021 11:43 PM GMT (Updated: 7 March 2021 11:43 PM GMT)

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 567 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 11-ந் தேதி முதல் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சராசரியாக 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை, புதிதாக பாதிக்கப்படுகிறவர்களை விட குறைவாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களாக குணமடைந்தோரை விட புதிதாக பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

567 பேர்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 348 ஆண்கள், 219 பெண்கள் என மொத்தம் 567 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 251 பேரும், கோவையில் 49 பேரும், செங்கல்பட்டில் 45 பேரும், குறைந்தபட்சமாக கரூர், தேனி, திருவண்ணாமலையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, பெரம்பலூரில் நேற்று புதிதாக பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில், 12 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 120 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 75 லட்சத்து 29 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 8 லட்சத்து 55 ஆயிரத்து 121 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 16 ஆயிரத்து 654 ஆண்களும், 3 லட்சத்து 38 ஆயிரத்து 432 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில், 12 வயதுக்குட்பட்ட 31 ஆயிரத்து 380 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 136 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஒருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு பெண் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 78 வயது பெண்மணி, சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழகத்தில் இதுவரையில் 12,518 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 521 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 228 பேரும், கோவையில் 55 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 38 ஆயிரத்து 606 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது தமிழகத்தில் 3 ஆயிரத்து 997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story