தி.மு.க.வை கட்டுப்பாடோடு வழிநடத்துகின்ற வல்லமை மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது துரைமுருகன் புகழாரம்


தி.மு.க.வை கட்டுப்பாடோடு வழிநடத்துகின்ற வல்லமை மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது துரைமுருகன் புகழாரம்
x
தினத்தந்தி 7 March 2021 11:57 PM GMT (Updated: 7 March 2021 11:57 PM GMT)

தி.மு.க.வை கட்டுப்பாடோடு வழிநடத்துகின்ற வல்லமை மு.க. ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.

திருச்சி, 

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அருகே நின்று பார்த்தால் மூன்று பக்கமும் கடலாக தெரியும். இப்போது இங்கு இருந்து பார்த்தால் மக்கள் கடலாகவே காட்சியளிக்கிறது. இதுபோன்ற கூட்டத்தை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை. இதை நினைத்து பிரமிப்பாக இருக்கிறது. தி.மு.க.வை கட்டுப்பாடோடு வழிநடத்துகின்ற வல்லமை, அரசியல் தெளிவு, மக்களை ஈர்க்கின்ற சக்தி மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது.

கருணாநிதி மறைவுக்கு பின்னர் 18 மாதத்துக்குள் கட்சியை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து, கட்சியை நிலைநாட்டிய பெருமை மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. இனிமேல் அதேபோன்று எதிர் அணியில் இருந்தவர்களை தன் அணிக்கு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வெற்றியை நிலைநாட்டியவர் மு.க.ஸ்டாலின். கொரோனா வந்துவிட்டது என்பதற்காக சோர்ந்துவிடாமல், கட்சியை எப்போதும் போல் சுறுசுறுப்பாக இயற்றியதும் மு.க.ஸ்டாலினின் மகத்தான பணி. அந்த பணியிலேயே இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

அரசியலில் புதுமை

இந்த ஆட்சியை மு.க.ஸ்டாலினால் கவிழ்த்திருக்கமுடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெ அணி, ஜானகி அணி என பிரிந்தபோது ஆட்சியை பிடிக்க இது தக்க நேரம் என்று கருணாநிதியை நாடினார்கள். கருணாநிதி, ‘புறக்கடை வழியிலே தி.மு.க. ஆட்சிக்கு வராது' என்றார். அதேபோன்று தான் மக்களிடம் வாக்குகளை பெற்று, கோட்டைக்கு வருவேனே தவிர, கொல்லைப்புறமாக வரமாட்டேன் என்ற உறுதியை எடுத்தவர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 5 தினங்களாக எம்.எல்.ஏ.க்காக விண்ணப்பித்த படிவங்கள் 7,800. அதிலே 5 ஆயிரத்து 580 பேரை நேரில் விசாரணை நடத்தியவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். தமிழகத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை 234 தொகுதிகளிலும் நடத்தியிருக்கிறார். இன்னும் 12 தொகுதிகளில் தான் பாக்கி. அதையும் நடத்துவார். இந்த 18 மாதங்களில் மு.க.ஸ்டாலின் செய்த புதுமை அரசியலில் மாற்றாரை வியக்க வைத்திருக்கிறது. எனவே அவர் அடுத்து கோட்டைக்கு செல்வதற்கு வழியனுப்ப வந்த கூட்டம் தான் இந்த மகத்தான கூட்டம்.

பெரியார், அண்ணா, கருணாநிதியாக...

மு.க.ஸ்டாலின் கோட்டைக்கு செல்லும் நாள் தமிழகத்துக்கு நன்மை செய்வது மட்டும் அல்ல, இந்திய ஜனநாயகத்தை காக்க ஒரு புனித போராட்டத்தை தொடங்கப்போகிறவரும் நீங்கள் தான். எந்த மாநிலத்திலாவது ஒரு எதிர்க்கட்சி தலைவர் இவ்வளவு பெருமை பெற்றது உண்டா? இந்த பெருமையை தேடி, தேடி கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். பெரியார் இல்லாத குறையை, அண்ணா இல்லாத சோகத்தை, கருணாநிதி இல்லாத வருத்தத்தை நீக்கி எங்களை பெரியாராக, அண்ணாவாக, கருணாநிதியாக கட்டிக் காக்கும் மு.க.ஸ்டாலின் எங்கள் வாழ்நாளையும் சேர்த்து வாழ்ந்து தமிழகத்தை வாழ வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story