மாநில செய்திகள்

திருச்சியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 7 உறுதிமொழிகள் வெளியீடு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மு.க.ஸ்டாலின் அறிவித்தார் + "||" + MK Stalin announces Rs.1,000 per month to family heads for release of 7 pledges at a grand public meeting in Trichy

திருச்சியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 7 உறுதிமொழிகள் வெளியீடு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

திருச்சியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 7 உறுதிமொழிகள் வெளியீடு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 7 உறுதிமொழிகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
திருச்சி,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலுக்கான தேதி அறிவிப்புக்குமுன்பாக, திருச்சியில் தி.மு.க. மாநில மாநாட்டை நடத்தி முடிக்க அக்கட்சி தலைமை திட்டமிட்டிருந்தது. அதன்படி, இம்மாதம் 14-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

திருச்சியில் பொதுக்கூட்டம்

ஆனால், அதற்கு முன்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தி.மு.க. மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாட்டுக்கான பெரும்பாலான பணிகள் நடந்து கொண்டிருந்ததால், அது பொதுக்கூட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, “விடியலுக்கான முழக்கம்” என்ற தலைப்பில் 7-ந் தேதி (அதாவது நேற்று) திருச்சியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான தனது 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டங்கள் அடங்கிய லட்சிய பிரகடன அறிக்கையையும் இந்த பொதுக்கூட்டத்தில் வெளியிடப்போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

எனவே, பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று திருச்சி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறுகனூரில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட இடத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தின் தொடக்கமாக, மதியம் 1 மணி அளவில், 90 அடி உயர கொடி கம்பத்தில் தி.மு.க. கொடியை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார்.

பிரசார காணொலிகள்

அதனைத் தொடர்ந்து அண்ணா, கருணாநிதி குறித்த பிரசார காணொலிகள் ஒளிபரப்பப்பட்டன. பின்னர் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி ஆகிய துறைகளின் தற்போதைய நிலை குறித்து தி.மு.க. நிர்வாகிகளும், வல்லுநர்களும் பேசினார்கள்.

அதன்பிறகு, தமிழ்ப் பண்பாடு மற்றும் பெருமையைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய துறைகளின் தற்போதைய நிலை குறித்து தி.மு.க. நிர்வாகிகளும், வல்லுநர்களும் பேசினார்கள்.

தொடர்ந்து, தமிழ்ப் பண்பாடு மற்றும் பெருமையைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சி 2-வது முறையாக நடைபெற்றது. அதன்பிறகு, மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார். அங்கிருந்த மக்களிடம் அவர் வாழ்த்தும் பெற்றார்.

7 உறுதிமொழிகள் வெளியீடு

அதன்பின்னர், தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உரையாற்றினார்கள். அவர்களைத் தொடர்ந்து, தமிழகத்தின் விடியலுக்கான 7 உறுதிமொழிகளை வெளியிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வின் தலைவராக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இன்று முதல் புதிதாக பிறக்கிறேன் என்றேன். இன்று நான் புதிதாய் பிறந்திருக்கிறேன். நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் எண்ணத்துடன், எனது கனவுத்திட்டத்தை அறிவிக்கும் இடம்தான் இந்த திருச்சி.

பரவசம்

இந்த கூட்டத்தின் முன்பு நிற்கும் போது எனது உள்ளம் பரவசம் அடைகிறது. சட்டமன்றத்துக்கு வரும் தைரியம் உண்டா? என்று எல்லோரும் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் தந்த இடம்தான் திருச்சி. 5 முறை தமிழகத்தை ஆண்டது தி.மு.க. அதற்கு வழியமைத்து கொடுத்தது தான் திருச்சி. இது மாநாடு அல்ல. மாபெரும் கூட்டம் என்றுதான் அறிவித்தேன். ஆனால் 5 மாநாடு ஒரு இடத்தில் நடப்பது போல நடந்து கொண்டிருக்கிறது.

அண்ணாவின் மறைவுக்கு பின் 1971-ம் ஆண்டு நம்மை வழிநடத்தும் கொள்கையை ஐம்பெரும் முழக்கமாக கருணாநிதி வடித்து கொடுத்தார். அந்த முழக்கத்தை முதலில் வடித்து தந்த ஊர் திருச்சி தான். இந்த ஊரில் எனது தொலைநோக்கு திட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாகரிகம் கற்றுத்தந்த தமிழினம்

ஈராயிரம் பெருமை கொண்டது தமிழ் நிலம். உலகத்துக்கு நாகரிகம் கற்றுத்தந்தது தமிழ் இனம். தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியம் வரையிலான காலகட்டத்தில் கலைகளால், பண்பாட்டால் சிறந்திருந்தது தமிழகம். இடையில் பண்பாட்டுக்கு பிரச்சினை ஏற்பட்டபோது, அதை மீட்க உதித்ததே திராவிட இயக்கம். 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையிலும், அதனைத்தொடர்ந்து கருணாநிதி தலைமையிலும் அமைந்த தி.மு.க. ஆட்சி தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை ஒளிவிளக்கு ஏற்றியது.

தி.மு.க. ஆட்சி காலத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெற்றது. இருமொழி கொள்கை வகுக்கப்பட்டது. சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. தி.மு.க.வின் சாதனைகளை சொல்ல தனி மாநாடு போடவேண்டும். நவீன தமிழகத்தை உருவாக்கியது தி.மு.க. ஆட்சி, கருணாநிதி தலைமையிலான ஆட்சி. இந்த அடிப்படை கட்டமைப்பை முழுமையாக சிதைத்த ஆட்சி தான்அ.தி.மு.க. ஆட்சி. தி.மு.க.வின் திட்டங்களை உருக்குலைப்பதே அ.தி.மு.க.வின் வழக்கம். அரசியல் வரலாற்றில் ஊழலுக்கு உதாரணமான ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான்.

ஜெயலலிதா மறைவில் மர்மம்

முதல்-அமைச்சர் பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்று சிறை சென்றவர், ஜெயலலிதா. அவரது மறைவில் மர்மம். அதற்கு பின்பு அவரது தோழி சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார். ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்-அமைச்சராக வைத்துக்கொண்டார். இந்த 10 ஆண்டில் தமிழகத்தை நாசமாக்கி விட்டார்கள். மொத்தமாக உருக்குலைத்து விட்டார்கள். இந்த ஆட்சிக்கு ஏப்ரல் 6-ந் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட இருக்கிறது.

மே 2-ந் தேதி தமிழகத்தின் புதிய விடியலுக்கான தி.மு.க. ஆட்சி அமைய இருக்கிறது. பெரியார் விரும்பிய சமூக நீதி ஆட்சியாக, அண்ணாவின் மாநில சுயாட்சி ஆட்சியாக, கருணாநிதியின் நவீன மேம்பாட்டு ஆட்சியாக, காமராஜரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாக, ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமையும். இப்படிப்பட்ட ஆட்சியை எப்படி கொண்டுசெலுத்துவது? என்பதற்காக ஒரு தொலைநோக்கு திட்டத்தை நான் வடிவமைத்திருக்கிறேன்.

முதல் பணி என்ன?

தமிழகத்தின் மிக முக்கியமான 7 துறைகளை முழுமையாக சீரமைத்து வளர்த்தெடுப்பதே எனது முதல் பணி. எனது அரசு முன்னுரிமை வழங்கவுள்ள 10 ஆண்டு இலக்கை மக்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த உறுதிமொழிகளுக்கு ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்று பெயர் சூட்டியிருக்கிறேன். இந்த உறுதிமொழிகளின் இலக்குகள் வளமான, ஏற்றத்தாழ்வில்லாத தமிழகத்தை உருவாக்குவது 7 முக்கிய துறைகளை சார்ந்தது.

பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி-சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி இவை அனைத்தும் முக்கிய துறைகள் ஆகும். இந்த 7 துறைகளில் எந்தமாதிரியான இலக்குகளை நாம் அடையவிருக்கிறோம் என்றால் வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கும் மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கைத்தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் இந்த இலக்குகளை எட்டியாக வேண்டும்.

10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

திட்டங்களின் விவரம் வருமாறு:-

* முதலாவதாக பொருளாதாரம் - (வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு). அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டுவதே முதல் இலக்கு. இதை சாதித்துவிட்டால் நமது பொருளாதாரம் ரூ.38 லட்சம் கோடியை தாண்டும். தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் உயரும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். இப்போதுள்ள வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாக குறைப்போம். கடும் வறுமையில் வாடும் 1 கோடி மக்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மீட்கபோகிறோம். இதன்மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் ஒருவர் கூட இல்லாத முதல் மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். அதற்கான பணியை எனது தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்ற போகிறது.

பயிரீடு பரப்பு75 சதவீதமாக உயர்த்துவோம்

* 2-வது வேளாண்மை - (மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி) தமிழகத்தில் நிகர பயிரீடு பரப்பு 60 சதவீதம் ஆகும். கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிட செய்து, இதை 75 சதவீதமாக உயர்த்தும் இலக்கை 10 ஆண்டுக்குள் எட்டவுள்ளோம். தமிழகத்தில் தற்போது 10 லட்சம் ஹெக்டேர் இருபோக நிலங்கள் உள்ளன. இதனை அடுத்த 10 ஆண்டில் 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவுள்ளோம். உணவுதானியங்கள், பணப்பயிர்களின் வேளாண் ஆக்கத்திறனில் முதல் 3 இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெற செய்வோம்.

* 3-வது நீர்வளம் - (குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்) தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரில் இருந்து 10 லட்சம் லிட்டராக உயர்த்தி வழங்க உறுதி பூண்டுள்ளோம். நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவை 50-ல் இருந்து 15 சதவீதமாக குறைக்கவுள்ளோம். மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை 5-ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தவுள்ளோம். பசுமை பரப்பளவை 20.27 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களை கூடுதலாக இணைக்கவுள்ளோம்.

3 மடங்கு நிதி உயர்வு

* 4-வது கல்வி-சுகாதாரம் (அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்) கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து செலவிடப்படும் நிதி அளவை 3 மடங்கு உயர்த்த இருக்கிறோம். கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெற செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். பள்ளிக்கல்வியில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதத்தை 16 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரி பள்ளிகளும், மருத்துவமனைகளும் அமைக்கப்படும். டாக்டர்கள்-செவிலியர்கள்-துணை டாக்டர்கள் மற்றும் பிற தொழிற்கல்வி பட்டதாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

* 5-வது நகர்ப்புற வளர்ச்சி (எழில்மிகு மாநகரங்களின் மாநகரம்:) - கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளின் அளவை 35 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும். அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும். புதிதாக 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தருவதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவை 16.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கும் கீழாக குறைக்கப்படும். நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து 15 மாநகரங்கள் இடம்பெறச் செய்யப்படும்.

ரூ.1,000 உரிமைத்தொகை

* 6-வது ஊரக உட்கட்டமைப்பு (உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கை தரம்) - தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் இப்போது 57 சதவீதம் கான்கிரீட் வீடுகள் உள்ளன. 20 லட்சம் கான்கிரீட் வீடுகளை புதிதாக கட்டித்தந்து, இதனை 85 சதவீதத்துக்கு உயர்த்தப்படும். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத சாலை இணைப்புகளும், வடிகால் அமைப்புகளும் கட்டமைக்கப்படும். எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை (பிராட்பேண்டு) இணைய வசதி ஏற்படுத்தப்படும். குறைந்தபட்சம் 50 சதவீதம் கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினைச செயலுற செய்வோம்.

* 7-வது சமூகநீதி (அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்) - குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகையை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும். மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

லட்சியம்

இவை தனிப்பட்ட மு.க.ஸ்டாலின் திட்டங்கள் மட்டுமல்ல. இவைதான் கோடிக்கணக்கான மக்களின் திட்டங்களாக மாறவேண்டும். அண்ணா முதன் முதலில் முதல்-அமைச்சரானபோது, எல்லா எண்ணங்களும் ஒரு அடிப்படையான லட்சியத்தை சுற்றி வட்டமிடுகின்றன. மக்களுக்கு நல்வாழ்வு தரவேண்டும் என்று லட்சியம். லட்சியம் மிகப்பெரியது. நான் சாமானியன், ஆனால் உங்கள் தோழன். ஆகவே எனது திறமையை நம்பி அல்ல, உங்கள் எல்லோரின் திறமைகளை நம்பி இந்த பணியில் ஈடுபடுகிறேன் என்று கூறினார். அதேபோல உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு உறுதிமொழியை நான் எடுக்கிறேன்.

கோடிக்கணக்கான மக்களின் ஆதரவோடு நாம் அமைக்கும் ஆட்சியானது இவற்றை நிறைவேற்றி தரும் ஆட்சியாக அமையும். 7 கோடி மக்களின் இதயங்களை வெல்வதின் மூலம் இந்த 7 தொலைநோக்கு திட்டங்களை நம்மால் நிறைவேற்றி காட்டமுடியும். தி.மு.க. ஆட்சி என்பது தனிப்பட்ட கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும். தனிப்பட்ட ஒரு அரசியல் இயக்க கொள்கையாக இல்லாமல் மனித சமுதாயத்தின் உயர்ந்த லட்சியங்களை அடையக்கூடிய ஆட்சியாக அமையும். இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளன. பரந்து விரிந்த இந்த தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தி.மு.க. ஆட்சி அமைய போகிறது.

அப்படி அமையும் அரசு ஸ்டாலினின் அரசாக அல்ல, நம் அனைவரின் அரசாங்கமாக இருக்கும். இதற்கான உறுதிமொழியை நாம் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொள்வோம். அனைத்து உரிமைகளையும் கொண்டதாக தமிழகத்தை மாற்றி காட்டுவோம். மக்களை பிளவுப்படுத்தும் எவரையும் கூட்டாக எதிர்நின்று தோற்கடிப்போம். எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசை நடத்தி காட்டுவோம். சட்டம்-ஒழுங்கை உறுதியோடு காப்பாற்றுவோம். சட்டமீறல்களையும், குற்ற சம்பவங்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்போம். 100 சதவீதம் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம். இந்த உறுதிமொழிகளை எந்நாளும் காப்போம்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்

தமிழ் பெருங்குடி மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, உங்களில் ஒருவனாகிய மு.க.ஸ்டாலின் ஆகிய நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முழுமையான உறுதியளிக்கிறேன். நிச்சயம் நிறைவேற்றுவேன். இந்த உறுதிமொழியை தமிழக மக்களின் இதயங்களில் ஏற்றிவைக்கவேண்டிய பெரும்பொறுப்பை, உங்கள் தோள்களில் ஏற்றி வைக்கிறேன். ஒளிமயமான எதிர்காலத்தை அமைப்பதற்காக பல தொலைநோக்கு திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார், தி.மு.க. அறிவித்துள்ளது என்பதை தமிழக மக்களின் இதயங்களில் நீங்கள் விதைக்கவேண்டும்.

இன்று மார்ச் 7-ந் தேதி. தேர்தல் தேதி ஏப்ரல் 6-ந் தேதி. இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு நாம் கொண்டுபோய் சேர்த்துவிட்டோம் என்றால் தி.மு.க.வின் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது. வீடு, வீடாக, வீதி, வீதியாக, தனியாகவும், கூட்டம் கூட்டமாகவும் செல்லுங்கள். இந்த 7 திட்டங்களை பற்றியும் சொல்லுங்கள். தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாக்களியுங்கள் என்று வாக்களர்களிடம் சொல்லுங்கள்.

இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, பேரழிவை நோக்கி செல்லும் தமிழகத்தை காப்பாற்றி, முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்வதற்கான தேர்தல் இது. நாம் எடுத்துள்ள உறுதிமொழிகள் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமல்ல, 10 ஆண்டுகளுக்கு சேர்த்து சொல்லியிருக்கிறேன். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. வெறும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல, தி.மு.க.வின் ஆட்சி காலம் முழுவதும் தொடர்ந்தால் மட்டுமே இந்த உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவேற்றமுடியும். அ.தி.மு.க. ஆட்சியை மாற்றுவதற்கான தேர்தல் அல்ல இது.

கவுண்டவுன் தொடங்கிவிட்டது

இனி தமிழகத்தில் எந்நாளும் தி.மு.க. ஆட்சி என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டிய தேர்தல். அந்த ஜனநாயக போர்க்களத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தோள்கொடுக்க முன்வந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து தொகுதி பங்கீடு இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது. அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிட இருக்கிறோம். அதன்பிறகு எனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளேன்.

இதோ... இன்று முதல் அ.தி.மு.க. ஆட்சி முடிவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் 30 நாட்களில் அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தி.மு.க. ஆட்சிக்கு தொடக்கப்புள்ளி வைப்போம். தி.மு.க. ஆட்சி மலரட்டும். உங்கள் கவலைகள் யாவும் தீரட்டும். தமிழர்களின் வாழ்வு செழிக்கட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின்
சென்னையை அடுத்த முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலை வேளையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின், இடையில் சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.
4. மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம்: தண்ணீர் பந்தல்கள் அமைத்து, கபசுர குடிநீர் வழங்குங்கள் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. தொண்டர்கள் தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. மறைந்த வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆனைமுத்து (வயது 96). மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவரான இவர், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உயிரிழந்தார்.