அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து ‘திடீர்’ ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது


அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து ‘திடீர்’ ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 10 March 2021 12:45 AM GMT (Updated: 10 March 2021 12:21 AM GMT)

கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகிய நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பான திடீர் ஆலோசனை கூட்டம், எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பிரதான கட்சியான அ.தி.மு.க. கடந்த 5-ந் தேதி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்) உள்பட 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் நிறைய சிக்கல் எழுந்தது.

காரணம், அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகிய நிலையில் த.மா.கா. மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. மேலும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகளும் முழுமையாக முடியவில்லை என்றே கூறப்பட்டது. இதனால் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யும் பணிகள் சற்று தாமதம் ஆனது.

திடீர் ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் ஒதுக்கீடு பணிகள் குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. இதில் கூட்டணியில் தொகுதி பங்கீடு பணிகள் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

இதற்கிடையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் இருந்தனர்.

பா.ஜ.க. நிர்வாகிகள் வருகை

இதற்கிடையில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், இரவு 9.10 மணிக்கு அ.தி.மு.க. அலுவலகம் வந்தனர். அ.தி.மு.க. அலுவலகம் வந்த அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அ.தி. மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகிய நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த ஆலோசனையின்போது பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம்? என்பது குறித்த தொகுதி ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியதால் விரும்பிய சில தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு பெற்றதாகவும், இதற்காக தொகுதி தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

முன்னதாக 50-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Next Story