குறைந்த தொகுதிகளை வழங்கியதால் ஏற்க மறுப்பு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. திடீர் விலகல்


குறைந்த தொகுதிகளை வழங்கியதால் ஏற்க மறுப்பு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. திடீர் விலகல்
x
தினத்தந்தி 10 March 2021 1:15 AM GMT (Updated: 10 March 2021 12:29 AM GMT)

குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதை ஏற்க மறுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தே.மு.தி.க. விலகியது. தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அ.தி.மு.க. மற்றும்தி.மு.க. கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்திலும் மும்முரம் காட்டி வருகின்றன.

3 கட்டங்களாக பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் முதலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தே.மு.தி.க.வுடன் முதலில் இருந்தே பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டாமலேயே இருந்தது. மொத்தம் 3 கட்டங்களாக அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டபோது வழங்கப்பட்ட தொகுதிகளுக்கு இணையாக, இடங்களை ஒதுக்க தே.மு.தி.க. கேட்டு வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல், தொடர்ந்து இழுபறியிலேயே இருந்தது.

இறுதியாக அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 13 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தி அடைந்த தே.மு.தி.க. தலைமை, மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த திட்டமிட்டனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் உள்பட 78 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் 78 மாவட்ட செயலாளர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் மதிப்பே இல்லை

கருத்துகளை கேட்ட பிறகு, தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் நாம் தொடர வேண்டும் என அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியிடம் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் பேசியது சரியாக இல்லை. கே.பி.முனுசாமி நம்மை மிகவும் அவமதிக்கும் வகையில் பேசினார். அவர், ‘உங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை சொல்லவே கூச்சமாக இருக்கிறது', ‘உங்களுக்கு பொதுமக்களிடம் மதிப்பே இல்லை' என்றெல்லாம் மரியாதையில்லாமல் பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் 33 நிமிடம் சந்தித்து பேசினேன். அப்போது அவரும் நம்முடைய கட்சியை அவமரியாதை செய்யும் வகையில் பேசினார். அப்போது நான், ‘ஜெயலலிதாவையே நகர்த்தி நாங்கள் அப்போது இடங்களை பெற்றோம்' என்று கூறினேன். அதற்கு அவர், “எடப்பாடியை நகர்த்தி அப்படி இடங்களை பெற முடியாது. ஏனென்றால் உங்கள் கட்சிக்கு பொதுமக்களிடம் பலமே இல்லை. இதை நான் மதிப்பிட்டு இருக்கிறேன். உங்கள் நிலைமை இதுதான். 9 இடங்களை மட்டும் தான் தரமுடியும்” என்றார்.

அவமதிப்பு

நான் அவரிடம் 18 இடங்களை கேட்டேன். வெகுநேரம் பேசிய பிறகு, கடைசியாக 13 இடங்களை தருவதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் பிரசாரத்துக்கு வரமுடியாத நிலையில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது பொதுமக்களிடம் உங்கள் கட்சிக்கு என்ன வலு இருக்கிறது? என்றெல்லாம் பேசினார். அவர் பேசிய இந்த விதம் நம்முடைய கட்சியை அவமதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. ஆகவே நாம் தனித்து போட்டியிடுவோம். நாம் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. தி.மு.க.வும் நம்மை கூட்டணிக்கு அழைக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தின் இறுதியில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “வேண்டாம்” என்கிற ஒற்றை வார்த்தையை மட்டும் பிரயோகித்தார்.

தே.மு.தி.க. விலகுகிறது

காலையில் 3 மணி நேரம் நடந்த கூட்டத்துக்கு பிறகு, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற அதிரடி முடிவை தே.மு.தி.க. அறிவித்தது. இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தே.மு.தி.க. சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றில் (நேற்று) இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

வேட்பாளர் பட்டியல்

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அப்போது அவர்கள் அ.தி.மு.க.வை வசைப்பாடியும், ‘கேப்டன் விஜயகாந்த் வாழ்க' என்ற குரலையும் அவர்கள் கோஷமாக எழுப்பினர். அதன்பின்னர், பிற்பகலில் மீண்டும் மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தது. அதில் தனித்து நின்று போட்டியிடலாமா?, நமக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? என்று மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் அவரவர் மாவட்டங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் பட்டியல்களை கொடுத்து, அவர்களிடம் போட்டியிடுவது பற்றி பேசி முடிவுகளை பெற்று பட்டியலை வழங்க தலைமை நிர்வாகம் கூறியிருப்பதாகவும், அதன்படி, பட்டியல்களை மாவட்ட செயலாளர்கள் வழங்கி வருவதாகவும், விரைவில் வேட்பாளர் பட்டியலை தே.மு.தி.க. அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

Next Story