அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: த.மா.கா. இன்று அவசர ஆலோசனை


அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: த.மா.கா. இன்று அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 11 March 2021 12:03 AM GMT (Updated: 11 March 2021 12:03 AM GMT)

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானதால் த.மா.கா. இன்று (வியாழக்கிழமை) அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்க உள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வருகிறது. இதுவரையில் பா.ம.க. வுக்கு 23, பா.ஜ.க. 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தநிலையில், குறைந்த தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது.

இதனை தொடர்ந்து த.மா.கா.வுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 12 இடங்களை கேட்ட த.மா.கா.வுக்கு அ.தி.மு.க. 3 இடங்கள் ஒதுக்க முன்வந்தது. ஆனால் இதை த.மா.கா. ஏற்கவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.

வேட்பாளர் பட்டியல்

இந்த பரபரப்புக்கு இடையே அ.தி.மு.க. நேற்று 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஏற்கனவே 6 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அ.தி.மு.க தரப்பில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது த.மா.கா. தரப்புக்கு அதிர்ச்சியை அளித்தது. அ.தி.மு.க. பட்டியலில் த.மா.கா. சார்பில் கேட்கப்பட்ட தொகுதிகளும் அடங்கும்.

அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் 14 தொகுதிகளே மீதமுள்ளது.

த.மா.கா. அவசர ஆலோசனை

இதற்கிடையே, த.மா.கா. அவசர கூட்டத்தை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட தொகுதி பங்கீடு விவரம், சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

Next Story