கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவு


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவு
x
தினத்தந்தி 16 March 2021 11:24 PM GMT (Updated: 16 March 2021 11:24 PM GMT)

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை செயலாளர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா தொற்று சற்று குறைந்திருந்த நேரத்தில், தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பள்ளிகளில் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை, மாணவிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவிட கூடாது. அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நேற்று தலைமை செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர், தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

* கொரோனா பாதிப்புகள் மாநிலத்தில் அதிகரித்து வருகின்றன. எனவே அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

* பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும்.

* வகுப்பறைகள், மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களை தினமும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* கொரோனா அறிகுறி இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது. அதேபோல் அறிகுறி இருக்கும் ஆசிரியர்கள் மற்றவர்களுடன் சேராதபடி தனிமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிவுரையில் கூறியுள்ளார்.

Next Story