'நமது சமுதாய வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்றுவோம்' நாடார் சமுதாய அரசியல் உரிமை அமைப்பு அறிவிப்பு


நமது சமுதாய வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்றுவோம் நாடார் சமுதாய அரசியல் உரிமை அமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2021 9:17 PM GMT (Updated: 17 March 2021 9:17 PM GMT)

ஆவடி, பெரம்பூர், விருகம்பாக்கம் உள்பட 12 தொகுதிகளில் நாடார் சமுதாய வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்றுவோம் என்று நாடார் சமுதாய அர சியல் உரிமைஅமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை, 

நாடார் சமுதாயத்துக்கு 40 சட்டமன்ற தொகுதிகளை தமிழக அரசியல் கட்சிகள் ஒதுக்கவேண்டும் என்று கடந்த 9-ந்தேதி சென்னையில் தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில், 65 சதவீதம் நாடார் சமுதாய வாக்குகள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளை, நாடார் சமுதாயம் மீட்டெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நாடார் சமுதாய அரசியல் உரிமை அமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, அமைப்பாளர் த.பத்மநாபன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் மின்னல் எச்.ஸ்டீபன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் தீர்மானத்தை வாசித்தார்.

ஒற்றுமையை நிலை நிறுத்த...

அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளையும் மீட்டெடுக்க முதல் கட்டமாக நாடார் சமுதாய வாக்குகளை ஒருமுகப்படுத்தவும், வெற்றி வாய்ப்புடைய வேட்பாளர்களை அடையாளம் கண்டு, நாடார் சமுதாயத்திலேயே போட்டி வேட்பாளர்கள் களம் இறங்குவதை தடுத்து அவர்களை வாபஸ் பெறச்செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

* மதப்பிரிவினை ஏற்படுத்தி நாடார் சமுதாய வேட்பாளர்களின் வெற்றியை நாடார் சமுதாயத்தவர்களே தடுக்கும் நிலை ஏற்படாதவாறு நாடார் சமுதாய ஒற்றுமையை தேர்தலில் நிலை நிறுத்த நாடார் சமுதாயம் சபதம் மேற்கொள்ளவேண்டும்.

* மேற்கண்ட முதல் கட்ட வேலைகளை திட்டமிட்டு முடித்து, 85 லட்சம் நாடார் வாக்குகளை கொண்ட நாடார் சமுதாயத்துக்கு 2021 சட்டமன்றத்தில் 21 நாடார் சமுதாயத்தவர்களை அமர்த்த நாடார் சமுதாய அரசியல் உரிமை அமைப்பு உறுதி செய்யும்.

* அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் 2 நாடார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியான ஆலங்குளம், தென்காசி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ராதாபுரம், சிவகாசி, பத்மநாபபுரம், திருச்செந்தூர், கிள்ளியூர் ஆகிய 9 தொகுதிகளில் யார் வெற்றி பெற்றாலும் அது நாடார் வேட்பாளர்களின் வெற்றியே.

நாடார் வேட்பாளர்களின் வெற்றிக்கு பணியாற்றுவோம்

* தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணியில் ஆவடி, பெரம்பூர், விருகம்பாக்கம், பாளையங்கோட்டை, ராஜபாளையம், ஆத்தூர், நாங்குநேரி, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, மயிலாப்பூர் ஆகிய 12 தொகுதிகளில் நாடார் சமுதாய வேட்பாளர்கள் வெற்றியடைய ஜனநாயக நெறிமுறைக்கு உட்பட்டு பணியாற்றுவோம்.

* நாடார் சமுதாயத்தின் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற நிலைப்பாட்டை 2026 சட்டமன்ற தேர்தலில் நாடார் சமுதாய அரசியல் உரிமை அமைப்பு நிறைவேற்றும்.

* வருகிற 25, 26-ந்தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் மற்றும் விளவங்கோடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் நாடார் மக்கள் கருத்தாய்வு கூட்டம் நடத்தி, தேர்தல் களப்பணியாற்றுவோம்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுபாஷ் பண்ணையார்

கூட்டத்தில், அமைப்பாளர்கள் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், ஏ.ஆறுமுக நயினார், சிலம்பு சுரேஷ், மதுரை பி.மகேந்திரவேல், ஆலந்தூர் பி.கணேசன், விஜயா சந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில், தமிழ் புரட்சி களத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பி.ராஜன் நன்றி கூறினார்.

Next Story