சொத்து தகராறில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி கொலை தம்பி கைது


சொத்து தகராறில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி கொலை தம்பி கைது
x
தினத்தந்தி 18 March 2021 11:11 PM GMT (Updated: 18 March 2021 11:11 PM GMT)

சேலத்தில் சொத்து தகராறில் துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் பெரியபுத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பெரியதாய். இவர்களுக்கு 5 மகள்களும், 4 மகன்களும் உள்ளனர். ராஜாகவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய 2-வது மகன் செல்வம் (வயது 43), வெள்ளிப்பட்டறை தொழிலாளி.

இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், ரேணுகா, மேனகா என்ற 2 மகள்களும் உள்ளனர். செல்வம் சித்தர்கோவில் மெயின் ரோட்டில் உள்ள கொத்தானூர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

செல்வத்தின் கடைசி தம்பி சந்தோஷ் (35). திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வருகிறார்.

சொத்து தகராறு

இவர்களுக்கு சொந்தமான வீட்டின் அருகே காலிமனை உள்ளது. இந்த நிலையில் சொத்தை பிரிப்பதுடன் காலி இடத்தையும் விற்பனை செய்ய வேண்டும் என்று செல்வம் கூறி வந்தார். ஆனால் இதற்கு சந்தோஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களிடையே கடந்த ஒரு மாதமாக சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் உறவினர் ஒருவரின் மகள் திருமணம் தொடர்பாக பேசுவதற்காக பெரியதாய், தனது மகன் செல்வத்தை வீட்டுக்கு அழைத்து உள்ளார். அதன்பேரில், அவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் தனது தாயாரின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.

துப்பாக்கியால் சுட்டார்

அப்போது மற்றொரு அறையில் இருந்த சந்தோஷ் ஜன்னல் வழியாக செல்வத்தை நோக்கி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார். இதில் செல்வத்தின் கழுத்தில் பால்ரஸ் குண்டு பாய்ந்தது. மற்றொரு குண்டு டி.வி.யில் பட்டு சிதறி செல்வத்தின் மார்பின் மீது பட்டது. இதில் படுகாயம் அடைந்த செல்வம் அங்கு சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உயிருக்கு போராடிய செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனிடையே அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கைது

சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சமலை கரட்டு பகுதியில் பதுங்கி இருந்த சந்தோசை கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்தனர். விசாரணையில் சொத்து தகராறில் அவர் செல்வத்தை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

சந்தோஷ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரை கொலை செய்து நகை பறித்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

Next Story