உதவியாளருக்கு கொரோனா: டைரக்டர் ஹரி ஆஸ்பத்திரியில் அனுமதி படப்பிடிப்பு நிறுத்தம்


உதவியாளருக்கு கொரோனா: டைரக்டர் ஹரி ஆஸ்பத்திரியில் அனுமதி படப்பிடிப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 19 March 2021 11:20 PM GMT (Updated: 19 March 2021 11:20 PM GMT)

சினிமா தொழில்நுட்ப உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தின் டைரக்டர் ஹரி காய்ச்சல் பாதிப்பால் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பழனி, 

சாமி, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஹரி. தற்போது இவர் பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண்விஜய் கதாநாயகன் ஆகவும், பிரியா பவானிசங்கர் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி, பெருமாள்புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.

இந்நிலையில் படத்தின் டைரக்டர் ஹரி மற்றும் படத்துக்கான இடம் தேர்வு செய்யும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் உதவியாளர் ஆகியோருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொழில்நுட்ப உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் இயக்குனர் ஹரிக்கு கொரோனா தொற்று இல்லை.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதனிடையே தொழில்நுட்ப உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் பழனி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்ட தொழில்நுட்ப உதவியாளரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொரோனா தொற்றுக்கு ஆளான தொழில்நுட்ப உதவியாளருடன் பணியாற்றிய மற்ற 17 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். இதற்கிடையே இயக்குனர் ஹரிக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருவதால் அவர் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Next Story