போர்க்குற்றம்: இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மன்றத்தில் எடுத்திட வேண்டாம் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


போர்க்குற்றம்: இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மன்றத்தில் எடுத்திட வேண்டாம் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2021 10:50 PM GMT (Updated: 21 March 2021 10:50 PM GMT)

இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம் என்று பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில், கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் - அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனமும், உலகத் தமிழர்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கியமான இந்தப் பிரச்சினையில் மத்திய பா.ஜ.க. அரசு ஏனோ தானோ என்று அக்கறை காட்டாமல் இருப்பது, தமிழர்களை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையின்பாற்பட்டதாகும். இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை - உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள்.

கண்டனம்

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா-இலங்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளது என்பதைக் கூட மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மறந்தது ஏன் என்ற கேள்வி இப்போது நியாயமாக எழுகிறது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினைக் கூட பிரதமர் நரேந்திர மோடி கேட்காமல் - போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிடுவது, தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது; மிகுந்த கண்டனத்திற்குரியது.

இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் எரிமலையாய்க் குமுறுகிறது. ஆகவே, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் நாளை (இன்று) எடுத்துக் கொள்ளப்படுகின்ற தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது - அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிடும் வகையில் - உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டி - உரிய திருத்தங்களுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறிட பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம்

இலங்கைத் தமிழர்களை அவமதித்து - அவர்களுக்கு அநீதி இழைத்து - இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம் என்றும் - தமிழ் நெஞ்சங்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாகிட வேண்டாம் என்றும் பிரதமர்நரேந்திர மோடியை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story