சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 22 March 2021 11:23 PM GMT (Updated: 22 March 2021 11:23 PM GMT)

சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒருவர் கைது.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் தே.மு.தி.க. கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மாலை சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், “தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்” என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றி கோயம்பேடு போலீசாருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மோப்ப நாய்கள் ‘பிளாக்கி’, ‘ஹான்ட்லர்’ உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தே.மு.தி.க. தலைமை அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். நீண்டநேர சோதனைக்கு பிறகும் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அவரை அந்த மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வர கோயம்பேடு தனிப்படை போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்து உள்ளனர். அவர்கள், சதீசிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அவர் எதற்காக தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story