பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு:சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கு 8 வாரத்தில் விசாரித்து முடிக்கப்படும்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு:சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கு 8 வாரத்தில் விசாரித்து முடிக்கப்படும்
x
தினத்தந்தி 23 March 2021 11:55 PM GMT (Updated: 23 March 2021 11:55 PM GMT)

சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரத்துக்குள் முடிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தமிழக சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல, அரசு அமைத்துள்ள விசாகா கமிட்டியும் புகார் குறித்து விசாரித்து வருகிறது.

நீதிபதி கேள்வி

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான பாலியல் புகார் மீதான விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சிறப்பு டி.ஜி.பி.யை இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

புலன் விசாரணை

இதையடுத்து, சிறப்பு டி.ஜி.பி.யை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் மூத்த சிறப்பு வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, சிறப்பு டி.ஜி.பி.யை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது என்று கூறினார். அதையடுத்து அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கின் புலன் விசாரணை எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

விரைவான விசாரணை

அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், 8 வாரத்தில் விசாரணை முடிக்கப்படும் என்று கூறினார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, புலன் விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story