மாநில செய்திகள்

அ.தி.மு.க.வை சேர்ந்த முகம்மதுஜான் எம்.பி. மாரடைப்பால் ‘திடீர்’ மரணம் + "||" + Mohammad Johan MP from AIADMK ‘Sudden’ death by heart attack

அ.தி.மு.க.வை சேர்ந்த முகம்மதுஜான் எம்.பி. மாரடைப்பால் ‘திடீர்’ மரணம்

அ.தி.மு.க.வை சேர்ந்த முகம்மதுஜான் எம்.பி. மாரடைப்பால் ‘திடீர்’ மரணம்
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அ.முகம்மதுஜான் எம்.பி. ‘திடீர்’ மாரடைப்பால் காலமானார்.
ராணிப்பேட்டை,

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அ.முகம்மதுஜான் எம்.பி. (வயது 72). 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

தற்போது அ.தி.மு.க.வில் மாநில சிறுபான்மை பிரிவு நல இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

வாக்கு சேகரிப்பு

இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் வாலாஜாவில் வாக்கு சேகரித்தார். அதன்பிறகு மதிய உணவுக்காக முகம்மதுஜான் எம்.பி. தனது வீட்டுக்கு வந்தார். சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

மாரடைப்பால் மரணம்

உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து முகம்மதுஜான் எம்.பி. ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முகம்மதுஜான் எம்.பி. திடீர் மறைவு அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அ.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

குடும்பம்

முகம்மதுஜான் எம்.பி. ராணிப்பேட்டையில் உள்ள காயிதே மில்லத் இஸ்மாயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி சஹீனாபர்வீன் (57). இவர்களுக்கு அலீம் அக்தர் என்கிற சலீம், கிஷர் உசேன், உமர்பாரூக் ஆகிய 3 மகன்களும், ஷபியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

துணை ஜனாதிபதி இரங்கல்

முகம்மதுஜான் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.முகம்மது ஜான் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

முகம்மது ஜானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜானின் திடீர் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவுக்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சராக, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து சீர்மிகு பணியாற்றியவர். மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த அவரது மறைவு, தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்.
2. 'என்னடி முனியம்மா' பாடி பிரபலமான நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் மரணம்
பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன். இவர் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்தார். டி.கே.எஸ்.நடராஜனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.
3. கமலுடன் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் மேளா ரகு. இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
4. உடல் நலக்குறைவு: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்
உடல் நலக்குறைவு: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்.
5. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பல்வேறு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.