‘‘சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைத்து கொள்வது குறித்து பரிசீலிப்போம்’’ தந்தி டி.வி.க்கு ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி


‘‘சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைத்து கொள்வது குறித்து பரிசீலிப்போம்’’ தந்தி டி.வி.க்கு ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 24 March 2021 1:14 AM GMT (Updated: 24 March 2021 1:14 AM GMT)

சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்வது குறித்து பரிசீலிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை, 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

நினைத்ததே இல்லை

கேள்வி:- அரசியலுக்கு வந்த புதிதில் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வருவோம் என நினைத்தது உண்டா?

பதில்:- நினைத்ததே இல்லை.

கேள்வி:- நீங்கள் தான் முதல்-அமைச்சர் என சொல்லப்பட்ட போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

பதில்:- ஜெயலலிதா என்னை திடீரென மாடிக்கு அழைத்தார். அதிகாரிகள் எல்லோரும் இருந்தார்கள். இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஒரு முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக போகும் என சொல்லிவிட்டு நீங்கள் தான் முதல்-அமைச்சர் என்றார். யாரோ ஒருவரை முதல்-அமைச்சர் ஆக்கப்போகிறோம். நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சொல்வார்கள் என்று தான் நினைத்தேன். நான் முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட போகிறேன் என்பதை யாரும் என்னிடம் சொல்லவில்லை.

வாக்குறுதி நிறைவேற்றம்

கேள்வி:- அப்போது உங்கள் மனதில் என்ன தோன்றியது?

பதில்:- எனக்கு உண்மையில் ஒன்றும் புரியவில்லை. முதல்-அமைச்சரா? அது பெரிய பொறுப்பாச்சே?. எல்லோருடைய அபிமானத்தையும் பெற வேண்டுமே? பல்வேறு பிரச்சினைகள் வருமே? என நினைத்தேன். ஆனால் எதற்கும் கவலைப்படாதீர்கள். பக்கத்தில் இருந்து உங்களை நான் வழிநடத்துவேன் என ஜெயலலிதா சொன்னார். அதன் பிறகு நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும்.

கேள்வி:- இந்த தேர்தல் வாக்குறுதியில் ரூ.1,500, இலவச சிலிண்டர்கள், இலவச வாஷிங்மெஷின் எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். அதை எல்லாம் செய்ய முடியுமா?

பதில்:- 2011-ல் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. 2016-ல் சொன்னதையும் நிறைவேற்றி இருக்கிறோம். இப்போதும் சொல்லியிருக்கிறோம். 2 ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க. சொன்னார்கள். கொடுத்தார்களா?

வரி வசூலில் கொடுப்போம்

கேள்வி:- நீங்கள் கூட கடந்தமுறை ரேஷன் கார்டுதாரர்களுக்கு போன் தருவதாக சொன்னீர்கள்? கொடுக்கவில்லையே?.

பதில்:- இந்த தேர்தல் முடிந்த உடன் உறுதியாக நடைமுறைப்படுத்துவோம்.

கேள்வி:- உங்க அளவுக்கு தமிழ்நாட்டு நிதி நிலைமை வேறு யாருக்கும் தெரியாது. ஐந்தரை லட்சம் கோடி கடன். இதற்கெல்லாம் இடம் கொடுக்குமா இந்த தேர்தல் வாக்குறுதி?

பதில்:- கடன்களை வாங்கி ஆடம்பர செலவு செய்யப்படுவதில்லை. இது சொத்தை உருவாக்குவதற்கும், மூலதன செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். வாஷிங்மெஷினை எங்கள் வரியில் இருந்து கொடுப்போம்.

கொள்கையில் மாற்றம் இல்லை

கேள்வி:- பா.ஜ.க.வுக்கு நெருக்கமாக போய்விட்டீர்கள், அடிபணிந்து போய் விட்டீர்கள் என அ.தி.மு.க. மீது அரசியல் ரீதியாக விமர்சனங்கள் உள்ளதே?

பதில்:- எங்களுக்கென்று தனி கொள்கை இருக்கிறது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகள். அந்த கொள்கையில் இருந்து நாங்கள் எந்த காலத்திலும் மாறுபட போவதில்லை.

கேள்வி:- ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டணி பலமாக இருக்கிறதா?

பதில்:- முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி நிறைவான ஆட்சி தந்துகொண்டு இருக்கிறார். நான் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறேன்.

10.5 சதவீத இடஒதுக்கீடு

கேள்வி:- 10.5 சதவீத இடஒதுக்கீடு கூட்டணிக்காக கொடுத்தீர்களா?.

பதில்:- கூட்டணிக்காக இல்லை. அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் தற்காலிகமாக 10.5 சதவீதம் கொடுத்துள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த பிறகு அதன் அடிப்படையில் யாருக்கு எத்தனை சதவீதம் என்று பிரித்து வழங்கப்படும். சில சாதிகள் சிறிய அளவில் உள்ளனர். நிறைய பேர் இடம்பெயர்ந்து உள்ளதாகவும் தெரியவருகிறது.

அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைப்பா?

கேள்வி:- அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணையக் கூடிய சூழல் உள்ளதா?

பதில்:- அந்த சூழ்நிலை இருதரப்பிலும் இல்லை.

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சி அமைய அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்து இருக்கிறாரே?

பதில்:- உள்ளபடியே அவர் அதை நினைத்து சொல்லியிருந்தால் நான் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

கேள்வி:- இதை பெருந்தன்மையாக பார்க்கிறீர்களா? ராஜதந்திரமாக பார்க்கிறீர்களா?

பதில்:- அதை அவரின் பெருந்தன்மையாகவே நினைக்கிறேன்.

சந்தேகம் இல்லை

கேள்வி:- சசிகலா மீது வருத்தம் உண்டா?

பதில்:- முதலில் இருந்தே அவர் மீது எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் மீது சில சந்தேகங்கள் இருந்தது. ஜெயலலிதா சமாதியில் இருந்தபடி நான் பேசிய பேட்டியில் கூட, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலாவிற்கு கெட்ட பெயர் வரும் சூழல் உள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தி நிரபராதி என்பதை நிரூபித்தால் கெட்ட பெயர் விடுபடும் என்பதை சொல்லியிருக்கிறேன்.

கேள்வி:- சசிகலா மீது உங்களுக்கு எந்த சந்தேகமும் எழுந்தது இல்லையா?

பதில்:- அவர் மீது எனக்கு சந்தேகமே இல்லை.

கேள்வி:- சசிகலா மீது இப்போது உங்களுக்கு இருப்பது நன்மதிப்பா?, வருத்தமா?

பதில்:- வருத்தமெல்லாம் இல்லை. ஜெயலலிதாவுடன் இருந்த போது அவருக்கு தேவையானதெல்லாம் செய்தார் என்ற நன்மதிப்புதான் உள்ளது.

கேள்வி:- அ.தி.மு.க.வுடன் இணைந்து சசிகலா பணியாற்ற எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளதா?

பதில்:- அவர் தான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறாரே.

கேள்வி:- ஒதுங்கிதான் இருக்கிறேன். விலகவில்லை என்கிறாரே?

பதில்:- இந்த பதிலை அவர் தான் சொல்ல வேண்டும். மாற்றக்கூடிய நிலைமை அவருக்கு இருக்கிறது.

பரிசீலிக்கலாம்

கேள்வி:- அ.தி.மு.க.வில் அவருக்கு இடம் இருக்கிறதா?

பதில்:- முதல்-அமைச்சர் வாய்ப்பில்லை என்று சொல்லி இருக்கிறார். என்னை பொறுத்தவரையில் 4 ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால் ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கின்ற கட்சி அமைப்பை ஏற்றுக்கொண்டால் அவரை இணைத்துக் கொள்வதை பரிசீலிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story