கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்க முடியும்


கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்க முடியும்
x
தினத்தந்தி 26 March 2021 7:44 PM GMT (Updated: 26 March 2021 7:44 PM GMT)

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்க முடியும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.

சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமநாதபுரம், காரைக்கால் பகுதிகளைச் சார்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதும், அவர்களை கைது செய்வதும், அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் இலங்கை கடற்படைக்கு வாடிக்கையாக மாறிவிட்டது. இதைப் பற்றி மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாலும், தமிழக அரசும் இது தொடர்பாக எந்த ஒரு அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு கொடுக்காமல் அலட்சியம் செய்வதாலும் இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவருகிறது.

கச்சத்தீவு ஒப்பந்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும். தேசபக்தி பற்றி வாய்வலிக்கப் பேசும் பா.ஜ.க.வினர் இன்றைக்கு மிகப் பெரும்பான்மையான பலத்தோடு ஆட்சியில் இருக்கும் நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? இந்திய இறையாண்மை மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் உடனடியாக கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதன்மூலமே தமிழக மீனவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story