புதையல் இருப்பதாக தோண்டிய குழியில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு


புதையல் இருப்பதாக தோண்டிய குழியில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 28 March 2021 7:56 PM GMT (Updated: 28 March 2021 7:56 PM GMT)

நாசரேத்தில் புதையல் இருப்பதாக தோண்டிய குழியில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாசரேத்,

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முத்தையா (வயது 65). இவர் நாசரேத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவாதேவி (42) என்ற மகளும், சிவமாலை (40), சிவவேலன் (37) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இதில் சிவாதேவி நாசரேத் அருகில் உள்ள சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். சிவமாலை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சிவவேலன் சென்னையில் சினிமா துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தில் அவர் தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார்.

புதையல் இருப்பதாக....

முத்தையா வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் புதையல் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து சிவமாலை, சிவவேலன் ஆகியோர் தனது நண்பரான ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ரகுபதி (47) என்பவரிடம் தெரிவித்தனர். பின்னர் குழிதோண்டி புதையல் எடுப்பதற்காக அவர்கள் முடிவு செய்தனர். இதற்கு துணையாக பன்னம்பாறையைச் சேர்ந்த நிர்மல் கணபதி (18) என்பவர் சென்றார்.

இவர்கள் 4 பேரும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூஜை போட்டு குழி தோண்டினர். 5 அடி அகலத்திற்கு 20 அடி ஆழமும், 4 அடி அகலத்திற்கு 25 அடி ஆழமும், பக்கவாட்டில் 7 அடி வரையும் குழி தோண்டினார்கள். இதற்கான ஏணியும் பயன்படுத்தி வந்தனர். இந்த பணி தினமும் நடைபெற்று வந்தது.

மயங்கி விழுந்தனர்

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சிவமாலை, சிவவேலன், ரகுபதி, நிர்மல் கணபதி ஆகியோர் குழி தோண்டுவதற்காக ஏணி வழியாக குழிக்குள் இறங்கினார்கள். மாலையில் திடீரென்று அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்தடுத்து 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

இதற்கிடையே சிவவேலன் மனைவி ரூபா என்பவர் தண்ணீர் கொடுப்பதற்காக ஏணி வழியாக குழிக்குள் இறங்கினார். அப்போது, அங்கு 4 பேரும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

2 பேர் பரிதாப சாவு

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி குழிக்குள் இறங்கினார்கள். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் வெளியே தூக்கி வந்தனர்.

அவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரகுபதி, நிர்மல் கணபதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சிவமாலை, சிவவேலன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பலியான நிர்மல் கணபதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story