சென்னையில் இதுவரை வாகன சோதனையில் ரூ.7½ கோடி, 46 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னையில் இதுவரை வாகன சோதனையில் ரூ.7½ கோடி, 46 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 28 March 2021 11:55 PM GMT (Updated: 28 March 2021 11:55 PM GMT)

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் இதுவரை ரூ.7½ கோடி, 46 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி, 

வருகிற 6-ந் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அமைந்தகரையில் நடைபெற்று வரும் வாகன சோதனையை பெருநகர சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் இதுவரை வாகன சோதனையில், ரூ.7½ கோடி பணம், 46 கிலோ தங்கம், 107 கிலோ வெள்ளி, ஆயிரம் லிட்டர் மதுபானங்கள், 350 கிலோ கஞ்சா ஆகியவை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 2 ஆயிரம் ரவுடிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிவு

தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் அவதூறு பரப்பியதாக அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோவில் உள்ள பெண் யார்? என்பதனை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆலந்தூரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் பா. வளர்மதி மகன் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக தேர்தல் பரப்புரையில் பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் கடந்த 2 நாட்களில் ஆயிரம் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story