முதல்-அமைச்சர் தாயார் குறித்து அவதூறு ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


முதல்-அமைச்சர் தாயார் குறித்து அவதூறு ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2021 12:02 AM GMT (Updated: 29 March 2021 12:02 AM GMT)

முதல்-அமைச்சர் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் 15 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை, 

தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அவரது தாயாரை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரது பிரசாரத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ‘பிரசாரத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர் கண்ணியக்குறைவான சொற்களை வெளிப்படுத்திட கூடாது. கண்ணியமற்ற பேச்சுகளை தி.மு.க. தலைமை ஒருபோதும் ஏற்காது' என்று மு.க.ஸ்டாலினும் அறிக்கை வாயிலாக அறிவுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் போராட்டம்

முதல்-அமைச்சர் குறித்து ஆ.ராசாவின் பேச்சு அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையில் எழும்பூர், பெரம்பூர், கே.கே.நகர், வள்ளுவர்கோட்டம், விருகம்பாக்கம் உள்பட 15 இடங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தியும், முதல்-அமைச்சரிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அ.தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். வள்ளுவர்கோட்டம் உள்பட சில இடங்களில் ஆ.ராசாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தனக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ‘என் பேச்சை தவறாக சித்தரித்துவிட்டனர்' என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story