பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை சென்னையில் தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்


பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை சென்னையில் தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்
x
தினத்தந்தி 30 March 2021 12:45 AM GMT (Updated: 30 March 2021 12:16 AM GMT)

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை குழுவில் துணை ராணுவப்படையினரும் இணைந்தனர்.

சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு சரியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுயேச்சை வேட்பாளர்களும் சுறுசுறுப்புடன் வாக்கு கேட்டு வருகின்றனர். வாக்காளர்களை எப்படியாவது கவர்ந்து ஓட்டுகளை அள்ளிவிட வேண்டும் என்ற மனநிலையில் அரசியல் கட்சியினர் மனகணக்கு போட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். காசு கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்று சில வேட்பாளர்கள் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருப்பு வரலாறு

தமிழ்நாட்டில் ‘தேர்தல் என்றாலே ஓட்டுக்கு பணம்’ என்ற கருப்பு வரலாறு ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்கிறது. எனவே இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்தி உள்ளது. அந்தவகையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் கண்காணிப்பு, ரோந்து பணியை மேற்கொள்ள 144 பறக்கும் படை குழுவினர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனர்.

மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதம் ஏந்திய 2 போலீசார் மற்றும் ‘வீடியோ கிராபர்’ அடங்கிய இந்த குழுவினர் ஒவ்வொரு தொகுதியையும் பம்பரம் போல் சுழன்று கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆங்காங்கே வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கெடுபிடி அதிகரிப்பு

தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், பறக்கும் படை அதிகாரிகள் சோதனை இரவு-பகலாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கார், வேன், லாரி போன்ற வாகனங்களை மடக்கி சோதனையிடுகின்றனர். மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பைகளை எடுத்து செல்பவர்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்கிறார்கள். சோதனை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

பணப்பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியாக குறுகிய தெருகளிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது ரோந்து சுற்றி வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், சென்னையில் இதுவரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.7.50 கோடி பணம், 46 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துணை ராணுவம்

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ள துணை ராணுவபடையினரும் தேர்தல் பறக்கும் படை குழுவில் நேற்று இணைந்தனர். இதன்மூலம் தேர்தல் பறக்கும் படை சோதனை வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

மாநகர பஸ் உள்பட அனைத்து வாகனங்களிலும் அதிரடியாக சோதனை நடத்துவதற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story