கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 5 பவுன் நகை கொள்ளை


கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 5 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 31 March 2021 9:31 PM GMT (Updated: 31 March 2021 9:31 PM GMT)

கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் நூற்றாண்டு பழமையான திருத்தலமாகும். இந்த திருத்தலத்தின் பின்னால் பழைய ஆலயம் உள்ளது.

தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் பழைய ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு செல்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் மாதாவுக்கு தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அவை மாதா சிலையின் மீது அணிவிக்கப்பட்டிருக்கும். தற்போது திருத்தலத்தில் புனித வார சடங்குகள் நடந்து வருகிறது. பெரிய வியாழனையொட்டி ஏசுநாதர் பீடம் திரையிட்டு மூடப்பட்டு இருந்தது.

நேற்று காலை திருத்தலத்திற்கு பிரார்த்தனை செய்ய சென்றவர்கள், பின்புறத்தில் பழைய ஆலயத்துக்கும் சென்றனர். அப்போது, பழைய ஆலயத்தின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி திருத்தல பங்கு பேரவை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மாதா சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்சங்கிலி, 1 பவுன் கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தன. யாேரா மர்ம நபர் நள்ளிரவில் ஜன்னல் கம்பிகளை வளைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து பங்குபேரவை நிர்வாகிகள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து திருத்தலத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, இரவு ஆலயத்தை பூட்டுவதற்கு முன் திருத்தலத்தில் உள்ள ஏசுநாதரின் பீடப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திரைசீலைகளுக்கு பின் மறைந்து இருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் திருப்பலி பீடத்தில் ஏறி மாதா சிலையில் உள்ள நகைகளை கொள்ளையடிக்க முற்சிப்பதும், சிலை உயரமாக இருந்ததால் நகைகளை எடுக்க முடியவில்லை.

பின்னர், அந்த மர்ம நபர் பழைய ஆலயத்துக்கு செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. அங்கு சென்ற மர்ம நபர் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பழைய ஆலயத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை.

இதையடுத்து கேமரா காட்சிகளின் பதிவுகளை வைத்து போலீசார் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டும் இதேபோல் இந்த திருத்தலத்தில் மாதா சிலையில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், அதில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் 2-வது முறையாக திருத்தலத்தில் கொள்ளை நடந்து இருப்பது கன்னியாகுமரி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story