டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு பி.ஆர்.பாண்டியன் தகவல்


டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு பி.ஆர்.பாண்டியன் தகவல்
x
தினத்தந்தி 1 April 2021 11:39 PM GMT (Updated: 1 April 2021 11:39 PM GMT)

விவசாய திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நடத்த உள்ள பாராளுமன்ற முற்றுகை பேரணியில் தமிழக விவசாயிகள் பங்கேற்போம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் வருகிற 10, 11-ந் தேதிகளில் நடைபயணம் மேற்கொள்வதுடன், மே மாதத்தில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணிக்கும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த போராட்டங்களில் பங்கேற்பது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் எங்கள் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.

போராட்டத்தை சிறுமைப்படுத்துகிறது

இதுவரை மத்திய அரசாங்கம் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இந்த போராட்டம் சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் என்றும், மத்திய அரசு விவசாயிகளுக்கு நல்லது செய்துவிடக்கூடாது என்று தடுக்கும் வகையில் ஒரு சில மாநிலங்களில் போராட்டம் நடத்தப்படுவதாகவும் கூறி, ஒன்றுபட்ட விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு சிறுமைப்படுத்துகிறது.

அதேநேரத்தில், விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

போராட்டத்தின் வடிவம்

தமிழகத்திலும், போராட்டத்தின் ஒரு வடிவம்தான் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறார்கள். பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாத அளவிற்கு விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பலை உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவும் ஒரு போராட்ட வடிவமே.

தமிழக விவசாயிகள் பங்கேற்பு

விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்த உள்ள பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, தமிழக காவிரி விவசாய சங்கம் முழுமையாக பங்கேற்க போகிறோம்.

பேரணி குறித்தான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு, தேதி அறிவிக்கப்படும்போது, தமிழகத்தில் இருந்து எவ்வளவு விவசாயிகள் பங்கேற்பது, எப்படி பங்கேற்பது என்பது குறித்து முடிவு எடுப்போம். வருகிற 10, 11-ந் தேதிகளில் நடைபெறும் நடைபயணத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story