‘‘தி.மு.க. நேரத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கட்சி’’ நீலகிரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு


‘‘தி.மு.க. நேரத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கட்சி’’ நீலகிரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு
x
தினத்தந்தி 1 April 2021 11:49 PM GMT (Updated: 1 April 2021 11:49 PM GMT)

‘‘ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு எதிராக வாக்களித்த தி.மு.க., நேரத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கட்சி’’, என்று நீலகிரி தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து அவர் பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்திலே எல்லா அதிநவீன வசதிகளுடன் உயரிய சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு சிறப்பான அரசு மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கே இருக்கக்கூடிய ஏழை-எளிய மலைவாழ் மக்களும் இதன்மூலம் சிறப்பான மருத்துவ சிகிச்சையை பெற முடியும். அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைந்தவுடன், நானே நேரில் வந்து இந்த அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பேன்.

குடிநீர் பிரச்சினை வராமல் இருக்க...

ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால் அங்கு சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும். நீலகிரி மலைபிரதேசத்தில் சின்ன சின்ன ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, நீர் தேக்கி, நம்முடைய மக்கள் பயன்படுத்தும் வகையில் எங்களுடைய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக தனி நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறோம். குடிநீர் பிரச்சினை வராமல் இருப்பதற்கு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நேரத்துக்கு ஏற்ப மாறும் தி.மு.க.

இந்த கூடலூர் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அ.தி.மு.க. அரசு செய்துகொடுக்கும். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் இன்றைக்கு மின் மிகை மாநிலமாக திகழ்கின்றது. இதனால் நாடு ஏற்றம் பெறுகிறது. இதனால் அதிக தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பினை எங்களுடைய அரசு உருவாக்கித்தந்துள்ளது.

அப்துல் கலாமை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு வாக்களித்த கட்சி அ.தி.மு.க. அவர் இந்திய நாட்டின் முதல் குடிமகனாக வருவதற்கு ஓட்டு போட்டு அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க. கட்சி. ஆனால் அப்துல் கலாமை எதிர்த்து நின்றவர்களுக்கு தி.மு.க. ஆதரவளித்தது. ஆக, நேரத்துக்கு ஏற்றார் போல மாறிக்கொள்கின்ற கட்சி தி.மு.க. ஆனால், நாங்கள் அப்படி அல்ல. உலமாக்கள், தங்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி அரசாங்கத்தின் மூலமாக வீடு கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று சொந்தமாக நிலம் வாங்கி அரசாங்கத்தின் மூலமாக கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். செக்சன் 17-ன் மீது முழுகவனம் செலுத்தப்படும், மலைவாழ் பகுதி மக்களுக்கு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க. அரசு மக்களுடைய அரசு, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகிற அரசு. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு விலையில்லா 6 கியாஸ் சிலிண்டர்கள், விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். கேபிள் டி.வி. இணைப்பு இனி கட்டணமில்லாமல் வழங்கப்படும். தாய்மார்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுனுக்கு குறைவாக அடமானம் வைத்து வாங்கிய தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனவே கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ஜெயசீலனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, குன்னூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Tags :
Next Story