முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி


முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 2 April 2021 8:50 PM GMT (Updated: 2 April 2021 8:50 PM GMT)

போலீசில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு, இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

போலீஸ் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை 72 மணி நேரத்துக்குள் அந்தந்தப் பிரிவு சார்ந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கோரியபோது, வழக்கின் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவத்தை உணர்ந்து சில வழக்குகள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை என பதில் அளித்துள்ளனர்.

விலக்கு

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகள், தீவிரவாத தன்மை கொண்ட வழக்குகளை மட்டுமே பதிவேற்றம் செய்ய விலக்களித்துள்ளது. இந்த முடிவையும் துணை சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விதிவிலக்கை அனைத்து வழக்குகளுக்கும் பொருத்தி முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை.

இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அறிக்கை

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி போலீஸ் துறையில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யாதது ஏன், முதல் தகவல் அறிக்கைகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

Next Story