தி.மு.க. வெற்றி பெற்றால் ஊழல்- கட்டப்பஞ்சாயத்து ஆட்சிதான் நடக்கும் ஜே.பி.நட்டா பேச்சு


தி.மு.க. வெற்றி பெற்றால் ஊழல்- கட்டப்பஞ்சாயத்து ஆட்சிதான் நடக்கும் ஜே.பி.நட்டா பேச்சு
x
தினத்தந்தி 3 April 2021 11:41 PM GMT (Updated: 3 April 2021 11:41 PM GMT)

தி.மு.க. வெற்றி பெற்றால் ஊழல்-கட்டப்பஞ்சாயத்து ஆட்சிதான் நடக்கும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் சி.சரஸ்வதியை ஆதரித்த நேற்று சிவகிரியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணி என்றால் அது ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு வழிவகுக்கும். தி.மு.க.வை ஆங்கிலத்தில் டி.எம்.கே. என்பார்கள். டி.எம்.கே. என்பதில் டி என்றால் டைனஸ்டி (வம்சாவளி), எம் என்றால் மணி (பணம்), கே என்றால் கட்டப்பஞ்சாயத்து. இதுதான் தி.மு.க.வின் விரிவாக்கம்.

தோல்வி பயம்

இந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்திக்கும். அவர்கள் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். இதனால் பொறுமை இழந்து பெண்களுக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மேடையில் பேச முடியாத அநாகரிக வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள்.

அவர்கள் வெற்றி பெற்று பதவிக்கு வந்து விட்டால் பெண்கள் மற்றும் தலித் மக்களின் நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். பெண்களுக்கும், தலித் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.

தி.மு.க.ஆட்சிக்கு வந்தால், கட்டப்பஞ்சாயத்து, மின்வெட்டு, குடும்பம் மற்றும் ஊழல் ஆட்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காரைக்குடியில்...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாண்டியன் திடலில், காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜே.பி.நட்டா, கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் கந்தசஷ்டி கவசத்தையும் கடவுள் முருகனையும் தி.மு.க.வினர் பழித்தனர். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்பட்டனர். இன்று தேர்தல் நிர்ப்பந்தம் காரணமாக அவர்களே கையில் வேல் பிடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறினார்.

Next Story