தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் தொடர்ந்து செல்ல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்; டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்


தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் தொடர்ந்து செல்ல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்; டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x

தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் தொடர்ந்து செல்ல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நிம்மதியாக வாழ முடியும்

தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கான 16-வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (அதாவது நாளை) நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களை விட இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. மகாபாரத புராணத்தைப் போன்று நன்மையை வீழ்த்த பெருந்தீமை துடித்துக் கொண்டிருப்பதுதான் அதற்கு காரணம் ஆகும்.

நமது வாழ்க்கையில் அனைத்தையும் நாம் தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறோம். அவ்வாறு இருக்கும்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறவர்கள் யார்? என்பதையும் அவர்களின் தகுதி, திறமை மட்டுமின்றி, கடந்த கால வரலாற்றையும் ஆய்வு செய்துதான் வாக்களிக்கவேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் நிம்மதியாக வாழ முடியும்.

தமிழ்நாடு என்னவாகும்?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஏன் நீடிக்க வேண்டும்? என்ற வினாவிற்கு ஆதாரப்பூர்வமான விடைகள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறது. மக்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொழில் வளம் பெருகியிருக்கிறது. கொரோனா காலத்திலும்கூட தமிழகத்திற்கு ரூ.1.50 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ்நாடு என்னவாகும்? என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.

நல்லவர்கள் விரும்பமாட்டார்கள்

தமிழ்நாட்டில் நிலப்பறிப்பு, கொலை-கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரிக்கும், வன்முறை தலைவிரித்தாடும், ஒரு குடும்பத்தைத்தவிர மற்றவர்கள் திரைப்படத்துறையிலோ, ஊடகத்துறையிலோ தாக்குபிடிக்க முடியாது, பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது, பிரியாணி, பஜ்ஜி, தேனீர் கடைகள் வைத்துகூட ஏழை மக்கள் பிழைக்க முடியாது என்பன போன்ற சீரழிவு செயல்கள்தான் அதிகரிக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தமிழ்நாடு வாழ்வதற்கு உகந்த மாநிலமாக இருக்காது. இப்படி ஒரு நிலை உருவாவதை நல்லவர்கள் எவரும் விரும்பவே மாட்டார்கள்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்

எனவே, தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் தொடர்ந்து வெற்றி நடைபோடுவதை உறுதி செய்ய ஏப்ரல் 6-ந் தேதி (நாளை) நடைபெறவுள்ள தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகளுக்கு மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்; அதன்மூலம் தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்யவேண்டும் என்று வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story