‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்; மாலை 6 மணிக்கு மேல் வாய்ப்பு வழங்கப்படும்


‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்; மாலை 6 மணிக்கு மேல் வாய்ப்பு வழங்கப்படும்
x
தினத்தந்தி 5 April 2021 7:47 PM GMT (Updated: 5 April 2021 7:47 PM GMT)

வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். மீண்டும் அவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் வாய்ப்பு வழங்கப்படும்.

பாதுகாப்பு உபகரணங்கள்

தமிழகத்தில் எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொரோனா பீதிக்கு மத்தியில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. ஒரு பக்கம் தேர்தல் பணி, இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பு பணி என அரசு அதிகாரிகள் பம்பரமாய் சுழன்று முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறும்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை அந்தந்த மாவட்டத்துக்கு சுகாதாரத்துறை அனுப்பி உள்ளது.

அதில், தெர்மல்ஸ்கேனர் (உடல் வெப்ப பரிசோதனை கருவி), சானிடைசர் (கிருமி நாசினி), கையுறை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல் வெப்பநிலை அதிகமானால்...

மேலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்து வாக்காளர்களையும் பரிசோதித்த பிறகே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். உடல் வெப்ப பரிசோதனை செய்யும்போது வாக்காளருக்கு அதிகளவில் உடல் வெப்பம் இருந்தால், அந்த நேரத்தில் அவருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது. ஓட்டு போட வரும் போது அனைத்து வாக்காளர்களும் முககவசம் அணிந்து வர வேண்டும். அவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கையுறை வாக்குச்சாவடி மையத்திலே வழங்கப்படுகிறது.

தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யும்போது, 98.5 பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவானால், அந்த வாக்களருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருந்த வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story