தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ‘வதந்தியை நம்ப வேண்டாம்’ என சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்


தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ‘வதந்தியை நம்ப வேண்டாம்’ என சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 April 2021 9:55 PM GMT (Updated: 5 April 2021 9:55 PM GMT)

தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், 6-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு என்ற செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வாளகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். 

இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தையும் சுத்தம் செய்வது, கை சுத்திகரிப்பான் 500 மி.லி, 100 மி.லி என தனி தனியாகவும், வெப்ப பரிசோதனை கருவி, முக கவசம், ஒரு முறை பயன்படுத்தும் கையுறை, முழு உடல் கவச உடை மற்றும் கடைசி நேரத்தில் கொரோனா நோயாளிகள் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தால் பாலிதீன் கையுறைகள் என அனைத்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து தான் ஓட்டு போட செல்ல வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் முக கவசம் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் இருக்கும் என யாரும் எதிர்பார்த்து செல்ல வேண்டாம். மேலும் அங்கு வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பாதிப்பு உயருகிறது

இந்தியாவில் நேற்று (நேற்று முன்தினம்) ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையிலும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் பாதிப்பு படிப்படியாக ஏறிக்கொண்டே செல்கிறது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிதல், பரிசோதனை செய்தல், அவர்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தவறாமல் நடந்து வருகிறது.

அதேபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 முதல் 30 பேரை கண்டறிந்து அவர்களை பரிசோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால், வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் போது தேவையற்ற குழப்பம் ஏற்படும். எனவே தேர்தல் முடிந்த பிறகு, வருகிற 7-ந் தேதி முதல் களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வது முழு வீச்சில் தொடரும்.

கொரோனா மையத்துக்கு செல்லலாம்

கொரோனா சிகிச்சை மையம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு விட்டது. சென்னையில் கிண்டி கொரோனா மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை என மொத்தம் 4,365 படுக்கைகளில், 1,269 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால் தொற்று பாதித்த அனைவரும் கிண்டி கிங் மருத்துவமனையில் மொத்தமாக சிகிச்சைக்காக போய் நிற்கிறார்கள். சாதாரண பாதிப்பாக இருக்கும்போது அவர்கள் கொரோனா மையத்துக்கு செல்லலாம் என்பது எங்களது வேண்டுகோள். அனைவரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய தேவை இல்லை.

தமிழகத்துக்கு இதுவரை 54 லட்சம் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது. சென்னையில் 400-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் உள்ளன. ஆனால் தினசரி தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உள்ளது. பெரும்பாலும் ஒரு தடுப்பூசி மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போட தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில், சராசரியாக 25 முதல் 30 பேர் மட்டுமே போட்டுக்கொள்கின்றனர்.

வதந்தியை நம்ப வேண்டாம்

தடுப்பூசியை மக்கள் அலட்சியப்படுத்துவது வருத்தமளிக்கிறது. நோய் தொற்று அதிகரிக்கும் இந்த சமயத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 7-ந் தேதிக்கு பிறகு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போட பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் ஒரு சிலருக்கு கொரோனா வரலாம். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இதுவரை 32 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். பொது மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மராட்டியம் மாநிலம் போல் நிலைமை கையை விட்டு போகாமல் இருக்க, மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, முழு ஒத்துழைப்புடன் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஊரடங்கு?

சென்னையில் 925 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. அங்கு களப்பணியாளார்கள் மூலம் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியே வராமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். திருமணம், இறப்பு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் கூட்டமாக கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். மேலும் 6-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு என்ற செய்தியை நம்ப வேண்டாம். ஆனாலும் நோய் பாதிப்பு அதிகரிக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். நோய் கட்டுப்பாட்டை மதிக்காததால் தான் மக்கள் கொத்தாக பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story