விரலில் இடப்படும் ‘மை’க்காக காத்திருப்பேன்; ‘சென்னை வந்த பின் ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை’; வாக்களித்த பின்னர் குஷ்பு பேட்டி


விரலில் இடப்படும் ‘மை’க்காக காத்திருப்பேன்; ‘சென்னை வந்த பின் ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை’; வாக்களித்த பின்னர் குஷ்பு பேட்டி
x
தினத்தந்தி 6 April 2021 6:49 PM GMT (Updated: 6 April 2021 6:49 PM GMT)

சென்னைக்கு வந்தபிறகு ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை என்று நேற்று வாக்களித்த பின்னர் குஷ்பு தெரிவித்தார்.

குஷ்பு பெருமிதம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்பு நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 5 வருடத்துக்கு ஒரு முறை விரலில் இடப்படும் ‘மை’க்காக ஆவலோடு காத்துக்கொண்டு இருப்பேன். வேட்பாளராக மட்டுமின்றி, என்னுடைய தொகுதிக்கு நான் வாக்களித்திருப்பது பெருமை அளிக்கிறது. சென்னைக்கு வந்தபிறகு ஒருமுறைகூட நான் வாக்களிக்கத் தவறியது இல்லை. மக்கள் வெளியே வந்து வாக்களிக்கவேண்டும்.

வாக்களிப்பது என்பது பெருமைப்படக்கூடியது. விரலில் ‘மை’ இடப்படும்போது கிடைக்கும் சந்தோஷம் எதிலும் கிடைக்காது. வேட்பாளராக, என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்றேன். மக்களைச் சந்திக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் தொகுதியில் 4 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோளாறானது. 30 நிமிடம், 45 நிமிடத்துக்குள் அதை சரிசெய்துவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.வினர் விதிகளை பின்பற்றியது கிடையாது

இதையடுத்து, ‘சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சட்டையில் தி.மு.க. கொடியுடன் சென்று வாக்களித்து இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, ‘அவ்வாறு செய்யக்கூடாது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கவேண்டும். எல்லா விதிகளையும் மீறி நாம் செயல்படுவோம் என்ற விஷயம் தி.மு.க.விடம் இருக்கிறது. விதிகளை அவர்கள் பின்பற்றியது கிடையாது’ என்றார்.

‘நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்திருக்கிறார். அது சமூக வலைதளங்களில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சென்றார் என்று பரவுகிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டதற்கு, ‘காரில் சென்று நேரத்தை வீணாக்கவேண்டாம் என்பதற்காக, வீட்டு அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்களித்திருக்கிறார்’ என்று பதில் அளித்தார்.

அப்போது, மயிலாப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் நட்ராஜ், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story