20 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து, மு.க.ஸ்டாலின் ஓட்டு போட்டார்; ‘மே 2-ந்தேதி முடிவு சிறப்பாக இருக்கும்' என்று பேட்டி


20 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து, மு.க.ஸ்டாலின் ஓட்டு போட்டார்; ‘மே 2-ந்தேதி முடிவு சிறப்பாக இருக்கும் என்று பேட்டி
x
தினத்தந்தி 6 April 2021 7:10 PM GMT (Updated: 6 April 2021 7:10 PM GMT)

20 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். ‘மே 2-ந்தேதி முடிவு சிறப்பாக இருக்கும்' என்று அவர் பேட்டியளித்தார்.

காத்திருந்து வாக்குப்பதிவு
தி.மு.க. கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் நேற்று காலை 7.50 மணியளவில் வருகை தந்தார்.அப்போது ஆண்கள் வரிசையில் 20-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க நின்றுக்கொண்டிருந்தனர். அந்த வரிசையில் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் 20 நிமிடங்கள் காத்திருந்து, வாக்களித்தனர். பெண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் துர்கா ஸ்டாலினும், 
கிருத்திகாவும் உடனடியாக வாக்களித்துவிட்டு வந்தனர்.

மு.க.ஸ்டாலின் பேட்டி

ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களுடைய ஜனநாயக கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள் அமைதியாக, ஆர்வத்தோடு வாக்களித்துக் கொண்டிருப்பதாக எனக்கு செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. ஆக, ஜனநாயக கடமையை முறையாக தமிழ்நாட்டு மக்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2-ந்தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) சிறப்பாக இருக்கும். அது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்தியும்..., அதிருப்தியும்..,

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மக்கள் எழுச்சியுடன் வாக்களிப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

பதில்:-ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்கிறேன்.

கேள்வி:- தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் சொல்ல முடியாது.

கேள்வி:- தி.மு.க. கூட்டணி எத்தனை தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- என்னைவிட உங்களுக்குதான் நன்றாக தெரியும். நீங்களே அதை சொன்னால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

தோல்வி பயம்

கேள்வி:- நீங்கள் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட தி.மு.க. போட்டியிடும் முக்கிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்களே...

பதில்:-இது ஆளுங்கட்சியின் ஒரு தூண்டுதல். தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தால், எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை.

கேள்வி:-அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு இருக்கிறார்களே...

பதில்:- இதில் தேர்தல் ஆணையம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி:- பணப்பட்டுவாடாவையும் முறியடித்து வெற்றி பெறுவீர்களா?

பதில்:-நிச்சயமாக...

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை
வாக்களிப்பதற்கு முன்பாக மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் அவருடைய உருவப்படத்துக்கும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Next Story