கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு (ஜி.சி.டி.) கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த பணி நேற்று காலை வரை நீடித்தது.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அறையில் வைக்கும் பணிகளை கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார். வாக்குப்பதிவு எந்திரத்தை வைக்கும் அறைக்கு நேரில் சென்ற கமல்ஹாசன், பாதுகாப்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுள்ளதா? ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? என்று அதிகாரிகளிடம் கேட்டு உறுதிப்படுத்தி கொண்டார்.
15 நிமிடங்களுக்குப் பின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து கிளம்பினார். கமல்ஹாசனுடன் கோவை சிங்காநல்லூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் உடன் வந்திருந்தார்.
இந்த தேர்தல் தனக்கும், தன்னுடைய கட்சியினருக்கும் புதிய அனுபவம் என்றும், மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.