மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 8 April 2021 1:06 AM GMT (Updated: 8 April 2021 1:06 AM GMT)

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் சூழ்நிலையில், முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்த்திராத வகையில் 3,645 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தப்படுத்த வேண்டியதும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு கூறி விட்டது. அதற்கு மாற்றாக தேவையற்ற விஷயங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும்.

ரூ.5 ஆயிரம் வரை அபராதம்

கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் வரை, ஒரு முறை வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் கூட, அத்தகைய பயணம் அவசியம்தானா? என நூறு முறை சிந்திக்கவேண்டும்.

அதற்குப் பிறகும் முககவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக, மாவட்ட ரீதியாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதுவும் தவிர்க்கப்படவேண்டும். தமிழக அரசு மீண்டும் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை அனைத்து தரப்பு வசதிகளையும் செய்ய தொடங்கி இருக்கிறது.

வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். அரசின் கோட்பாடுகளை கவனமாகவும், கண்டிப்பாகவும் கடைப்பிடிக்கவேண்டும். தனிமனிதர்களும் முறையாக கோட்பாடுகளை கடைப்பிடித்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story