வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் கமிஷனர் ஆய்வு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்


வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் கமிஷனர் ஆய்வு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்
x
தினத்தந்தி 8 April 2021 1:26 AM GMT (Updated: 8 April 2021 1:26 AM GMT)

சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நேற்றுமுன்தினம் முடிந்தது. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மெரினா ராணி மேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை 20 நிமிடங்கள் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் பகலவன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.

3 அடுக்கு பாதுகாப்பு எப்படி?

ஆய்வுக்கு பின்னர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற்றுள்ளது. சென்னை போலீஸ் மாவட்ட எல்லைக்குள் லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரம் எம்.எம்.சி. கல்லூரி ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவப்படையினர், 2-வது அடுக்கில் தமிழக சிறப்பு போலீசார், 3-வது அடுக்கில் சென்னை போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒரு தொகுதிக்கு முதல் அடுக்கில் துணை ராணுவ வீரர்கள் 9 பேரும், 2-வது அடுக்கில் தமிழக சிறப்பு போலீசார் 5 பேரும், 3-வது அடுக்கில் நுழைவுவாயில்களுக்கு ஏற்ப உள்ளூர் போலீசாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு 500 பேர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10 வழக்குகள் பதிவு

வாக்கு எண்ணும் மையத்தில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடுவதற்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந்தேதி அன்று வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். சென்னையில் தேர்தல் அன்று நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story