சட்டமன்ற தேர்தல் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு ‘டாஸ்மாக்’ கடைகள் திறப்பு மதுபிரியர்கள் மகிழ்ச்சி


சட்டமன்ற தேர்தல் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு ‘டாஸ்மாக்’ கடைகள் திறப்பு மதுபிரியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 April 2021 1:51 AM GMT (Updated: 8 April 2021 1:51 AM GMT)

சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தேர்தல் அமைதியாகவும், அசம்பாவிதம் இன்றியும் நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மதுபிரியர்கள் 3-ந்தேதியே வேண்டிய மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் ரூ.309 கோடிக்கு மது விற்பனை ஆனது.

தவித்து போன மதுபிரியர்கள்

இதையடுத்து தேர்தலையொட்டி, 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையில் மது பாட்டில்களை முன்கூட்டியே பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த சம்பவங்களும் அரங்கேறி வந்தன. மது பாட்டில்களை பதுக்கியோர், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

இதனால் கூடுதல் விலைக்கு மது வாங்கவேண்டியதாக போயிற்றே... என மதுபிரியர்கள் வருத்தம் கொண்டனர். தங்கள் மனக்குறைகளை தீர்க்க முடியாமல் 3 நாட்களாக, தேர்தல் எப்போது முடியும்? மதுக்கடைகள் எப்போது திறக்கும்? என்று வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தனர்.

மதுக்கடைகள் திறப்பு

இந்தநிலையில் தேர்தல் முடிந்த மறுதினமான நேற்று பகல் 12 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 3 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் பள்ளி விடுதி மாணவர்கள் போல நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த முகமாக டாஸ்மாக் பாரில் நுழைந்தனர். அந்தவகையில் நேற்று மதுக்கடைகளில் கூட்டம் காணப்பட்டது.

இதுகுறித்து மதுபிரியர்கள் கூறுகையில், ‘‘3 நாட்கள் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் வருத்தமாக இருந்தோம். கூடுதல் விலைக்கு மது வாங்கவும் எங்களால் முடியவில்லை. இப்போது மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் ஆனந்தமாக இருக்கிறோம்’’, என்று உணர்ச்சி பெருக்குடன் கூறினர்.

Next Story