யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிப்பிட்டு பேசவில்லை தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம்


யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிப்பிட்டு பேசவில்லை தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 8 April 2021 1:58 AM GMT (Updated: 8 April 2021 1:58 AM GMT)

யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க.வின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவர் விமர்சித்தார்.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பி, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது.

அதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேய் மாலிக்கிற்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பிய பதில் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடத்தை விதியை மீறவில்லை

என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். அந்த விளக்க நோட்டீசில் காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. தாராபுரம் தொகுதியில் நான் பேசிய பேச்சின் முழு விவரத்தை எடுக்காமல், அதிலுள்ள 2 வரிகள் மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பிரச்சினைக்குரியதாக காட்டப்படும் அந்த 2 வரிகளும் ஏன் பேசப்பட்டன என்பதற்கு எனது முழு பேச்சும் கருத்தில்கொள்ளப்பட வேண்டும். எனவே எனக்கு முழு பேச்சின் மொழியாக்கத்தை அளித்தால் நானும் முழு விளக்கத்தை அளிக்க முடியும்.

இந்த விஷயத்தில் பா.ஜ.க. கொடுத்த புகாரின் நகலும் தரப்படவில்லை. இயற்கை நீதிக்கு உட்பட்டு அதன் நகலும் எனக்கு தர வேண்டும். எனது முழு பேச்சை கருத்தில் கொண்டால், நான் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்பது தெரியும்.

அழுத்தமும், தொல்லையும்....

அ.தி.மு.க. கூட்டணிக்காக மார்ச் 30-ந் தேதியன்று தாராபுரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நான் குறுக்கு வழியை பயன்படுத்தி தி.மு.க.வின் உயர் பதவிக்கு வந்ததாக என் மீது குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில், முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, பா.ஜ.க.வில் ஏற்கனவே மூத்த தலைவர்கள் இருக்கும்போது குறுக்கு வழியை பயன்படுத்தி பிரதமர் ஆனார் என்று பேசினேன். அந்த மூத்த தலைவர்களான அத்வானி, யஸ்வந்த் சின்ஹா, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் பெயரை குறிப்பிட்டேன்.

கட்சியின் தலைவர் அல்லது பிரதமர் நிலையை எட்ட முடியாதபடி அந்த மூத்த தலைவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டது என்றும், மற்ற தலைவர்களும் பிரதமர் பதவியை எட்ட முடியாததால் மன அழுத்தம் என்ற தொல்லைக்கு ஆட்பட்டனர் என்று பேசினேன்.

தெளிவற்ற குற்றச்சாட்டு

நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிப்பிட்டு பேசியதாக உள்ள குற்றச்சாட்டை உங்கள் நோட்டீஸ் வெளிக்கொணரவில்லை. குறிப்பிட்ட குற்றச்சாட்டை தெளிவாகக் கூறாத நிலையில் நானும் முழு விளக்கம் அளிக்க இயலாது.

அந்த தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. எனது மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கான பதிலாகவே எனது பேச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே இந்த எனது இடைக்கால விளக்கத்தை ஏற்றுக்கொள்வதோடு, எனது முழு பேச்சின் நகலையும், புகார் மனுவில் நகலையும் நான் பெற்ற பிறகு முழு விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story